நலம் தரும் இந்திய மூலிகைகளில் சுக்கு சமையல றையில் தவறாமல் இடம்பெறும் ஒன்று. சித்த மருத்துவம், ஆயுர்வேதம் இவற்றில் மட்டுமல்ல… சீன மருத்துவத்திலும், ஜப்பானின் கம்போ மருத்துவத்திலும், கொரியனின் சுஜோக் மருத்துவத்திலும் முதன்மையான இடம் சுக்குக்கு உண்டு என்பது தெரியுமா?
சுக்கு, பித்தத்தை சமன்படுத்தி அதன் பின்விளைவுகளான மலச்சிக்கல், உப்புசம், குடல் புண்கள் போன்றவற்றை நீக்குகிறது. சளி இருமல் போன்ற பாதிப்புக்கும் நிவாரணம் தருகிறது. இந்த தீபாவளிக்கு இந்த சுக்குடன் ஆரோக்கியம் தரும் வரகரிசியையும் இணைத்து நம் பாரம்பரிய இனிப்பான அதிரசத்தை செய்து தாருங்கள்.
தேவையானவை:
வரகரிசி -ஒரு கப்
மண்டை வெல்லம் துருவியது - ஒரு கப் சுக்குத்தூள் - ஒரு அங்குலம்
ஏலக்காய் தூள் -10
எண்ணெய் -தேவையான அளவு
செய்முறை:
வரவேற்சியை கழுவி 2 மணிநேரம் நன்றாக ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து ஈரம் இழுக்கும் விதமாக காய்ந்த பருத்தித் துணியில் பரப்பி கால் மணிநேரம் காற்றில் ஆறவிடவும். லேசான ஈரம் இருக்கும்போதே மிக்ஸியில் மாவாக அரைக்கவும். மிக்சியில் ஏலக்காய் சுக்கு சேர்த்து பொடித்து தூளாக்கவும். வரகரிசி மாவுடன் ஏலக்காய்த்தூள், சுக்குத்தூளை சேர்த்து கலக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் பொடித்த வெல்லத்துடன் கால் டம்ளர் மட்டும் தண்ணீர் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கி தூசி தும்பை வடிகட்டவும். ஒரு அடி கனமான அகலமான பாத்திரத்தை எடுத்து அதில் வெல்லக் கரைசலை ஊற்றி மீண்டும் ஒருமுறை கொதிக்க விட்டு பாகு உருட்டு பதத்தில் வரும்வரை காய்ச்சி அதனுடன் வரகு மாவை சிறிது சிறிதாக சேர்த்துக் கிளறவும். மாவை சற்று நேரம் ஊறவிட்டு சிறிய உருண்டைகளாக உருட்டி வாழை இலையில் சிறிது எண்ணெய் தடவி வட்டமாக தட்டவும்.
ஒரு வாணலியில் அதிரசம் பொரிக்கத் தேவையான அளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து தட்டி அதிரசங்களை போட்டு மெதுவாக திருப்பி இருபுறமும் பொன்னிறமாக சிவந்ததும் ஒரு கரண்டியால் அதிரசத்தை எடுத்து மேலே மற்றொரு கரண்டி வைத்து அழுத்தினால் அதிகப்படியான எண்ணெய் வடிந்துவிடும். இந்த அதிரசத்தை ஒன்றின் மீது ஒன்று அடுக்கி ஆறியதும் சுத்தமான ஈரம் இல்லாத டப்பாவில் போட்டு அடுக்கி மூடி வைக்கவும். உடல் நலன் தரும் தீபாவளி அதிரசம் ரெடி.