
விடுமுறை நாட்களில் வளர்ந்த பிள்ளைகள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு வித்தியாசமான இனிப்பு கார வகைகளை செய்து தரும்படி கேட்பார்கள். சில எளிய பிஸ்கட் வகைகள் செய்து வைத்தால் சத்தம் போடாமல் சாப்பிட்டுவிட்டு அவரவர் வேலையை பார்ப்பார்கள். அதற்காக இரண்டு ரெசிபிகள் இதோ.
இனிப்பு பிஸ்கட் செய்ய தேவையான பொருட்கள்:
மைதா மாவு -ஒரு கப்
ரவை- ஒரு டேபிள் ஸ்பூன்
பச்சரிசி மாவு- ஒரு டேபிள் ஸ்பூன்
பொடித்த சீனி- கால் கப்
நெய்- ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய் -பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
எண்ணையைத் தவிர அனைத்து பொருட்களையும் ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு நன்றாக கலந்து தேவையான அளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து சிறிது நேரம் ஊறவிடவும். பின்னர் சப்பாத்திக்கல்லில் எண்ணெய் தேய்த்து சற்று கனமான உருண்டைகளாக உருட்டி, திரட்டி டைமண்ட் ஆக கட் பண்ணவும். இதை சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். சதா நொறுக்கு தீனி கேட்பவர்களுக்கு இதுபோல் டப்பாவில் செய்து அடைத்து வைக்கலாம். குழந்தைகள் அவ்வப்போதுபோக வர சாப்பிடுவார்கள்.
கார பிஸ்கட்:
செய்ய தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு -ஒரு கப்
மைதா- ரெண்டு டேபிள் ஸ்பூன்
வேர்க்கடலை பொடி- ஒரு டேபிள் ஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு- ஒரு டேபிள் ஸ்பூன்
உளுந்து மாவு- ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகாய்த் தூள் -ஒரு டீஸ்பூன்
நெய்- ஒரு டேபிள் ஸ்பூன்
எள், ஓமம்- தலா அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் தேவைக்கேற்ப
செய்முறை:
அரிசி, உளுந்து, மைதா மாவுகளை லேசாக வறுக்கவும். இதனுடன் எண்ணெயைத் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து கலந்து தேவையான அளவு நீர்விட்டு கெட்டியாக பிசைந்து, சிறிய சப்பாத்தி உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திக்கல்லில் எண்ணெய் தேய்த்து திரட்டி சின்னச் சின்ன தட்டைகளாகவோ, மாவை அதிகமாக உருட்டி டைமன்ட்களாகவோ அல்லது ரிப்பன் பக்கோடா போலவோ நீளமாக கத்தி அல்லது ஸ்பூனால் கட் செய்து கொதிக்கும் எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். மிருதுவாகவும், ருசி காரமாகவும் இருக்கும் இந்த பதார்த்தத்தை அனைவரும் விரும்பி உண்பர்.