
கற்பூரவள்ளி (Plectranthus amboinicus) மருத்துவ குணம் கொண்ட ஒரு மூலிகைச் செடியாகும். இதன் இலைகள் சளி, இருமல், தொண்டை கரகரப்பு போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு நல்ல தீர்வாக அமைகிறது. கற்பூரவள்ளி இலைகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. அதுமட்டுமின்றி கற்பூரவள்ளி இலைகளை தினமும் காலையில் தேனுடன் சாப்பிட்டு வந்தால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கற்பூரவள்ளியில் பஜ்ஜி, சட்னி, ரசம், கேசரி போன்ற பல்வேறு சத்தான, ருசியான உணவுகளையும் செய்யலாம்.
இந்த துவையலை வாரம் ஒருமுறை செய்து சாப்பிட்டு வந்தால், சளி, இருமலில் இருந்து நிவாரணம் கிடைப்பதுடன்,நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
இந்த கற்பூரவள்ளி துவையலை நல்ல சூடான சாதத்துடன் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். சளி, காய்ச்சாலால் அவதிப்படுபவர்கள் இந்த துவையல் செய்து சாப்பிட்டால் காய்ச்சல் குறையும், வாய் கசப்பு நீங்கும், அஜீரண கோளாறு உள்ளவர்கள் வாரம் ஒருமுறை கற்பூரவள்ளியை ஏதாவது ஒரு வகையில் உணவாக செய்து சாப்பிட்டு வரலாம்.
இவ்வளவு நன்மைகள் நிறைந்த கற்பூரவள்ளியை வைத்து சூப்பரான துவையல் செய்து எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கற்பூரவள்ளி இலை - 10
உளுந்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - கால் கப்பிற்கும் குறைவாக
புளி - நெல்லிக்காய் அளவு
தனியா - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
காய்ந்த மிளகாய் அல்லது ப.மிளகாய் - 3
சின்ன வெங்காயம் - 15
சீரகம் - கால் டீஸ்பூன்
பூண்டு பல் - 5
பெருங்காயத்தூள் - சிறிளதவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
* கொத்தமல்லி, கற்பூரவள்ளி இலைகளை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
* சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.
* வாணலியை அடுப்பில் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, உளுந்தம் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்து கொள்ளவும்,
* அடுத்து தனியாவை சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும்.
* அடுத்து சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து நன்றாக வதங்கியதும், அதனுடன் கொத்தமல்லி, கற்பூரவள்ளி , பெருங்காயத்தூள் சேர்த்து கொத்தமல்லியில் உள்ள தண்ணீர் வற்றும் வரை சுருள வதக்கி தனியாக வைத்து கொள்ளவும்.
* அடுத்து அதே கடாயில் புளியை சேர்த்து வறுத்த பின்னர், துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர் இறக்கி ஆறவைக்கவும்.
* ஒரு மிக்சி ஜாரில் வதக்கிய அனைத்தையும் சேர்த்து, அதனுடன் சிறிது தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து மென்மையாக அரைத்த பின்னர் கடைசியாக சீரகத்தை போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
* தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது. உப்பு சரிபார்த்து தேவைப்பட்டால் சேர்த்து கொள்ளலாம்.
இப்போது சூப்பரான கற்பூரவள்ளி துவையல் ரெடி.