
இனிப்பு அவல் உருண்டை
தேவை:
கெட்டி அவல் - 2 கப்
வெல்லத் தூள் -1 கப் தேங்காய் துருவல் - அரை கப் ஏலக்காய் தூள் - சிறிது
பசு நெய் - ஒரு ஸ்பூன்.
செய்முறை:
அவலை ரவை போல உடைத்துக்கொள்ளவும். அதனுடன் நெய், வெல்லத்தூள், தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் கலந்து அழுத்திப் பிசையவும். வெல்லத்திலும், தேங்காய் துருவலிலும் ஈரப்பசை இருப்பதால் அவை அனைத்தையும் இணைத்துவிடும். உருண்டைகளாக உருட்டி வைத்தால் சுவையான, சத்தான இனிப்பு அவல் உருண்டை தயார்.
புளிப்பு கார அவல்
தேவை:
கெட்டி அவல் -2 கப்
தேங்காய் துருவல் - 1 கப்
இஞ்சி துருவல் -2 ஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் -1
மல்லித்தழை - சிறிது
உப்பு - தேவைக்கு
செய்முறை:
அவல், தேங்காய் துருவல், இஞ்சி துருவல், புளி, உப்பு, பச்சை மிளகாய், மல்லித்தழை ஆகியவற்றை மிக்ஸியில் ஒன்றாக இரண்டு சுற்று சுற்றி எடுத்தால், நாவுக்கு சுவையான புளி கார அவல் தயார். தயிர் பச்சடி தொட்டுக் கொண்டால் பொருத்தமாக இருக்கும்.
பேரிச்சம் பழ பர்பியும், கல்யாண முருங்கை வடையும்
பேரிச்சம் பழ பர்பி
தேவை:
பேரிச்சம் பழம் - கால் கிலோ
கசகசா - 50 கிராம்
சர்க்கரை - 3 கப்
பசு நெய் - 2 ஸ்பூன்
செய்முறை:
பேரிச்சம் பழங்களின் கொட்டைகளை நீக்கவும். மிக்ஸியில் கெட்டியாக நீர் சேர்க்காமல் அரைக்கவும். சர்க்கரையை முதிர் பாகு காய்ச்சி, அதில் கசகசா, அரைத்த பேரிச்சம் பழ விழுது, சர்க்கரை, நெய் கலந்து கிளறவும். பர்பி பதம் வந்ததும், நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டிப் பரப்பி, ஆறியதும் வில்லைகளாக போடவும். சுவையான, சத்தான பேரிச்சம் பழ பர்பி ரெடி.
கல்யாண முருங்கை வடை
தேவை:
முருங்கை இலை - அரை கப்
புழுங்கல் அரிசி - 1 கப்
மிளகு, சீரகம் - தலா 1 ஸ்பூன்
உப்பு , எண்ணெய் - தேவைக்கேற்ப.
செய்முறை:
புழுங்கல் அரிசியை ஊறவைக்கவும். கல்யாண முருங்கை இலைகளை நரம்பு நீக்கி, சுத்தம் செய்யவும். ஊறிய அரிசியை களைந்து, அதனுடன் கல்யாண முருங்கை இலை, மிளகு, சீரகம், உப்பு சேர்த்து அரைக்கவும். மாவை வடைகளாக தட்டி, காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான, சத்தான கல்யாண முருங்கை இலை வடை ரெடி. கல்யாண முருங்கை இலை, சளி தொந்தரவுகளை போக்கக்கூடியது.