நமது சமையலில் அதிகம் இடம்பெறுவது சத்துக்கள் நிறைந்த பருப்பு வகைகள். அதில் ஒன்று கடலைப்பருப்பு. திருமணங்களில் கடலைப்பருப்பு கலந்த கூட்டுவகை நிச்சயம் இருக்கும். ஆனால் அதை பலரும் ஒதுக்கி விடுவது வருத்தம்தான். கடலைப்பருப்பில் உள்ள நலன்கள் தெரிந்தால் நிச்சயமாக அதை தேடி உண்போம்.
இதில் அதிகளவில் கால்சிய சத்து உள்ளது. வலுவான எலும்பு மற்றும் பற்களை உருவாக்கவும் எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறது. ரத்த சர்க்கரை அளவை குறைப்பதால் நீரிழிவுக்கு சிறந்தது. இதில் நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகம் உள்ளதால் இதை உண்டால் நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தரும்.
சரி கூட்டு தவிர்த்து எல்லோரும் விரும்பும் வகையில் என்ன செய்யலாம்? இதோ கடலைப்பருப்பு இனிப்பு இட்லியும் கார இட்லியும்.
கடலை பருப்பு இனிப்பு இட்லி
தேவை:
கடலை பருப்பு -இரண்டு கப்
பச்சரிசி - 1 சிறிய கப்
கருப்பட்டி - ஒன்றரை கப்
சோடா உப்பு - அரை தேக்கரண்டி தேங்காய் துருவல் - அரை மூடி
ஏலக்காய் – 7
செய்முறை:
காலையில் இட்லிகளை செய்ய விரும்பினால் இரவிலேயே கடலைப்பருப்பையும் பச்சரிசியையும் நன்றாக களைந்து ஊற வைத்துக் கொள்ளவும். காலையில் எழுந்ததும் அதை மிக்ஸியில் இட்டோ அல்லது கிரைண்டரிலோ ரவை பதத்திற்கு ஆட்டி எடுக்கவும். ஆட்டும்போதே தூளாக்கி வைத்த கருப்பட்டியையும் ஏலக்காயையும் சேர்த்து ஆட்டி எடுக்கவும். அதிகம் நீர் உற்ற வேண்டாம். இட்லி மாவைபோல் கெட்டியாக ஆட்டி தனியாக பாத்திரத்தில் வைத்து அதில் துருவிய தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய்தூள் சோடா உப்பு கலந்து இட்லி தட்டில் வைத்து வேகவைத்து எடுத்தால் கடலை பருப்பு இனிப்பு இட்லி ஜோராக இருக்கும். விரும்பினால் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கலாம்.
கடலை பருப்பு கார இட்லி
தேவை;
கடலைப்பருப்பு - 2 கப்
பச்சரிசி - 1 கப்
விருப்பப்படி காய்கள் - 1 கப்
வெங்காயம் -2
பச்சை மிளகாய் -3
உப்பு - தேவைக்கு
சோடா உப்பு - 1 சிட்டிகை
கறிவேப்பிலை கொத்துமல்லி - சிறிது
எண்ணெய் - தாளிக்க
செய்முறை:
கடலைப்பருப்பு இனிப்பு இட்லியை போலவே கடலைப்பருப்பு பச்சரிசியை ஊறவைத்து கருப்பட்டி ஏலக்காய் போடாமல் அவற்றுக்கு பதில் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து முக்கால் பதமாக வேகவைத்த காய்கறிகளுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி மாவில் கலந்து தேவையான உப்பு சோடா உப்பு போட்டு இட்லி சுடலாம்.
நமக்குத் தேவையான கடலைப்பருப்பு நம் உணவில் வாரம் இருமுறையாவது இடம் பெற வேண்டும்.