
பாசிப்பயறு சுய்யம்
செய்யத் தேவையான பொருட்கள்:
அரிசி- ஒரு கப்
பாசிப் பயறு -ஒரு கப்
வெல்லம்- ஒரு கப்
உளுத்தம் பருப்பு -அரை கப்
தேங்காய்த் துருவல் -கால் கப்
ஏலப்பொடி- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
அரிசி, உளுந்து இரண்டையும் தனித்தனியாக நன்றாக ஊறவைத்து அரைத்து உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும். பாசிப்பயறை நன்றாக ஊறவைத்து, குக்கரில் வேகவைத்து குழையாமல் எடுக்கவும். பின்னர் தண்ணீரை வடித்து வெல்லம் சேர்த்து மையாக அரைத்து தேங்காய்த் துருவல், ஏலப்பொடி சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
இப்பொழுது பூரணம் ரெடி. இந்தப் பூரணத்தை எலுமிச்சை அளவில் எடுத்து அரைத்து வைத்துள்ள மாவில் தோய்த்து எடுத்து நன்றாக காய்ந்த எண்ணெயில் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். இந்த சுய்யம் சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாக இருக்கும்.
சீரக முருங்கை வடை:
செய்யத் தேவையான பொருட்கள்:
உளுந்து -ஒரு கப்
பச்சரிசி மாவு- ஒரு டேபிள் ஸ்பூன்
ஊறவைத்த பயத்தம் பருப்பு- ஒரு டீஸ்பூன்
வரமிளகாய் -ஐந்து
சீரகம்- ஒரு டீஸ்பூன்
முருங்கைக்கீரை- கைப்பிடி அளவு
பொடியாக அரிந்த சின்ன வெங்காயம் -15
மஞ்சள் பொடி -கால் டீஸ்பூன்
கருவேப்பிலை ,தனியா- கைப்பிடி அளவு பொடியாக அரிந்தது
எண்ணெய் உப்பு- தேவையான அளவு
செய்முறை:
உளுந்தை நன்றாக ஊறவைத்து அதனுடன் , வரமிளகாய், சீரகம், மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து அரைக்கவும். இந்த மாவுடன் பச்சரிசிமாவு, பயத்தம் பருப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய முருங்கை கீரை, கறிவேப்பிலை, தனியா அனைத்தையும் சேர்த்து பிசைந்து வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்க சீரக, சின்ன வெங்காய முருங்கைக்கீரை வாசனையுடன் கம கம என்று சாப்பிடுவதற்கு இன்பமாக இருக்கும்.