குழம்பு வைக்க நேரமில்லையா? 2 நிமிஷத்துல இந்த 'தட்கா தஹி' செஞ்சா சோறு பத்தாது!

Tadka Dahi
Tadka Dahi
Published on

சில நேரங்களில் நமக்கு சமையல் செய்யவே சோம்பேறித்தனமாக இருக்கும். அல்லது ஃப்ரிட்ஜில் காய்கறிகள் தீர்ந்து போயிருக்கும். அந்த மாதிரி சமயங்களில் கைகொடுக்கும் ஒரு சூப்பர் டிஷ்தான் இந்த "தட்கா தஹி" (Tadka Dahi). வட இந்தியாவில் ரோட்டி, சப்பாத்திக்கு இதைத் தொட்டுக்கொண்டு சாப்பிடுவார்கள். நம் ஊர் தயிர் பச்சடி போலத்தான், ஆனால் இதில் ஒரு சின்ன ட்விஸ்ட் இருக்கிறது. 

நெய்யில் வறுத்த பூண்டு, சீரகம் மற்றும் மிளகாய்த்தூள் சேரும்போது, அந்த சாதாரண தயிர் ஒரு ராஜ உணவாக மாறிவிடும். புளித்த தயிர் இருந்தால் கூட, அதை வீணாக்காமல் இப்படிச் செய்து அசத்தலாம். வாருங்கள், அந்த சிம்பிள் ரெசிபியைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • கெட்டித் தயிர் - 1 கப் 

  • பெரிய வெங்காயம் - 1

  • பூண்டு - 4 பற்கள் 

  • பச்சை மிளகாய் - 2 

  • வரமிளகாய் - 1

  • கடுகு, சீரகம் - தலா ½ டீஸ்பூன்

  • கறிவேப்பிலை - 1 கொத்து

  • மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்

  • காஷ்மீரி மிளகாய்த்தூள் - ½ டீஸ்பூன் 

  • உப்பு - தேவைக்கேற்ப

  • எண்ணெய் அல்லது நெய் - 1 டேபிள் ஸ்பூன்

  • கொத்தமல்லி தழை - சிறிது.

செய்முறை:

முதலில் தயிரைத் தயிரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, விஸ்க் அல்லது கரண்டியால் கட்டிகள் இல்லாமல் க்ரீமியாக அடித்து வைத்துக்கொள்ளவும். தேவைப்பட்டால் லேசாகத் தண்ணீர் தெளிக்கலாம், ஆனால் தயிர் கெட்டியாக இருந்தால் தான் ருசி. இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து தனியாக வைக்கவும்.

இதையும் படியுங்கள்:
வாயில் வைத்தால் வழுக்கிக் கொண்டு போகும்… கண்ணாடி போல ஜொலிக்கும் 'ரோஸ் அல்வா'!
Tadka Dahi

இப்போது ஒரு சிறிய வாணலியில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றவும். நெய் ஊற்றினால் வாசனை இன்னும் தூக்கலாக இருக்கும். சூடானதும் கடுகு, சீரகம் மற்றும் வரமிளகாய் சேர்க்கவும். சீரகம் பொரிந்ததும், பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும். பூண்டு லேசாகச் சிவக்க வேண்டும், அப்போதுதான் அதன் மணம் தயிரில் இறங்கும்.

அடுத்ததாக, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கினால் போதும், ரொம்பவும் கருக விடவேண்டாம். வெங்காயம் வதங்கியதும், அடுப்பை சிம்மில் வைக்கவும் அல்லது அணைத்துவிடவும். இது மிக முக்கியம்.

ஏனென்றால், இப்போது நாம் மசாலா சேர்க்கப் போகிறோம். அதிக சூட்டில் மசாலா சேர்த்தால் கருகிவிடும். மஞ்சள் தூள் மற்றும் காஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்த்து அந்தச் சூட்டிலேயே ஒரு புரட்டு புரட்டவும். அந்த சிவப்பு நிறம் வந்தவுடன், உடனடியாக இந்தத் தாளிப்பை நாம் அடித்து வைத்துள்ள தயிரில் கொட்டவும்.

இதையும் படியுங்கள்:
ஸ்மார்ட் கிச்சன் டிப்ஸ்: சமையலில் அசத்த 15 சூப்பர் வழிகள்!
Tadka Dahi

தாளிப்பைக் கொட்டியதும், மேலே நறுக்கிய கொத்தமல்லித் தழைகளைத் தூவி மெதுவாகக் கலந்துவிடவும். இப்போது பார்த்தால், வெள்ளையான தயிரின் மேல், அந்தச் சிவப்பு நிறத் தாளிப்பு கலந்து பார்க்கவே அழகாக இருக்கும். 

சுடச்சுட சாதம், சப்பாத்தி, அல்லது பராத்தாவுடன் இதை வைத்துச் சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். குறிப்பாக, வெயில் காலத்திற்கு வயிற்றுக்குக் குளிர்ச்சியாகவும், அதே சமயம் காரசாரமாகவும் சாப்பிட இது ஒரு பெஸ்ட் சாய்ஸ்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com