
என்னுடைய குஜராத்தி தோழி காஞ்சன் ஷா வீடு சென்றிருக்கையில், "வாழை இலை" உபயோகித்து ஒரு டிஷ் செய்து கொண்டிருந்தாள். எனக்கும் சாப்பிடக் கொடுத்தாள். டேஸ்ட்டியாக இருந்தது. டிஷ்-இல், வாழை இலை கம-கமவென மணத்தது.
விபரம் கேட்கையில், இது "ஸ்பெஷல் குஜராத்தி பாங்கி". வாழை இலையை உபயோகித்து செய்வது என்றவள், ரெசிபியை விரிவாக கூறினாள். அதன் விவரம்:
தேவை:
நல்ல அரிசி மாவு 2 கப்
கெட்டித் தயிர் 2 கப்
பச்சை மிளகாய் 3
(பொடியாக நறுக்கி கொள்ளவும்).
இஞ்சி (துருவியது) 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
மிளகு பொடி 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் 1/4 டீஸ்பூன்
ஃப்ரெஷ் கொத்தமல்லி
இலை (நறுக்கியது) 1/4 கப்
வாழை இலை 4. (மீடியம் சைஸில் வெட்டி வைத்துக் கொள்ளவும்)
எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையானது
தண்ணீர் தேவையானது
செய்முறை:
முதலில் ஒரு வாயகன்ற ஃபௌலில், அரிசிமாவு, தயிர், துருவிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், மஞ்சள் பொடி, பெருங்காயம், மிளகு பொடி, சீரகம், தேவையான உப்பு, நறுக்கிய கொத்தமல்லி இலை எல்லாவற்றையும் போட்டு கலக்கிக் கொள்ளவும்.
இத்துடன் கொஞ்சம் - கொஞ்சமாக தண்ணீர்விட்டு இட்லி மாவு மாதிரி கரைத்துக்கொள்ள வேண்டும். சுமார் பத்து நிமிடங்கள் மூடி வைக்கவும்.
வெட்டிய வாழை இலைகளில் ஒன்றினை எடுத்து அதில் பரவலாக சிறிது எண்ணெய் தடவி, ஒரு கரண்டி இட்லி மாவை நடுவே ஊற்றவும். மற்றுமொரு வாழையிலையில் லேசாக எண்ணெய் தடவி அந்த மாவின் மீது மேலாக மூடவும். நான்கு, நான்காக செய்து வைத்துக்கொண்ட பிறகு, மெதுவாக இவைகளை இட்லி பாத்திரத்தினுள் வைத்து வேகவிட்டு எடுக்கவும். சுமார் பன்னிரெண்டு இட்லிகள் வரை வரும். வெளியே எடுக்கும்போதே வாழை இலை வாசனை வரும்.
தொட்டுக்கொள்ள காம்பினேஷன் கொத்தமல்லி சட்னி அல்லது தக்காளி சட்னி. சாப்பிட மிகவும் டேஸ்ட்டியாக, வாழை இலை மணத்துடன் செமையாக இருக்கும் இந்த "வாழை இலை பாங்கி".