dhal saving tips - பருப்புல பூச்சியா? வண்டா? அச்சச்சோ என்ன செய்வது? 15 டிப்ஸ்...

Samayal awarness  tips
dhal saving tips
Published on

ருப்பு வகைகளை நீண்ட நாட்கள் கெடாமல், வண்டு பூச்சிகள் துளைக்காமல் பாதுகாப்பது என்பது சிக்கலான விஷயம்தான். அதுவும் வருடாந்திர சாமானாக மொத்தமாக வாங்கி சேமிக்கும் பொழுது சில வழிகளை கடைப்பிடித்தால் அவை எளிதில் கெட்டுப் போகாமல் பாதுகாக்கலாம். மாதாந்திர சாமானாக வாங்குபவர்களும் இந்த எளிய குறிப்புகளை பயன்படுத்தி பயன்பெறலாம்.

1) மாதந்தோறும் மளிகைப்பொருட்களை வாங்குவதை விட விலை குறைவாக இருக்கும் சமயங்களில் மொத்தமாக வாங்கி சேமிப்பது சிக்கனமாகும். ஆனால் இவற்றில் புழு, வண்டு, பூச்சிகள் பிடிக்காமல் இருக்க வாங்கியதும் நல்ல வெயிலில் இரண்டு மூன்று நாட்கள் வைத்து எடுத்து பின்பு பத்திரப்படுத்தலாம். ஒரு வருடமானாலும் கெடாது இருக்கும்.

2) வெயில் அதிகம் இல்லாத இடங்களில் வாழ்பவர்கள் அல்லது வெயிலில் உலர்த்தும் வசதியோ, நேரமோ இல்லாதவர்கள் பருப்பை வாங்கியதும் வெறும் வாணலியில் இரண்டு நிமிடங்கள் சூடு வர வறுத்து பின்பு ஆறவைத்து சேமிக்கலாம். நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

3) ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கொண்டைக்கடலை, பட்டாணி போன்ற பருப்பு வகைகள் முறையற்ற சேமிப்பு காரணமாக கெட்டுப் போக வாய்ப்புகள் அதிகம். வண்டுகள் துளைத்து மாவுகளாக்கி அரித்து விடும். இவற்றை பாதுகாக்க சிறந்த வழி காற்று புகாத டப்பாக்களில், கண்ணாடி ஜார்களில், பிளாஸ்டிக் டப்பாக்களில் இறுக்கமான மூடிகள் கொண்டு மூடி வைப்பதுதான். இல்லையெனில் இவை காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி எளிதில் கெட்டுப்போக வழி வகுக்கும்.

4) பச்சைப்பயிறு, கொண்டைக்கடலை, பட்டாணி போன்ற பருப்பு வகைகளை வண்டுகள் அரிக்காமல் இருக்க வெறும் வாணலியில் போட்டு சூடு வர வறுத்து ஆறியதும் பத்திரப்படுத்த வண்டுகள் துளைக்காமலும், அரிக்காமலும் இருக்கும்.

5) அடுத்ததாக பருப்பு வகைகளை பாதுகாப்பதில் வெப்பநிலை மிகவும் முக்கியம். நேரடியான சூரிய ஒளி அல்லது ஈரப்பதத்தில் இருந்து விலக்கி உலர்வான இடத்தில் சேமிப்பது நல்லது. அடுப்பிற்கு அருகிலோ, வெயில்படும் இடங்களிலோ வைக்காமல் வறண்ட மற்றும் குளிர்ந்த இடங்களில் சேமித்து வைப்பது நல்லது.

6) பருப்புகளை பல மாதங்களுக்கு கெடாமல் சேமிக்க விரும்பினால் சீல் செய்யப்பட்ட பைகள் சிறந்த பலன் தரும். காற்று புகாத கவரில் சேமித்து வைப்பது நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க உதவும்.

இதையும் படியுங்கள்:
வித்தியாசமான சுவையில் நான்கு பர்பி வகைகள்!
Samayal awarness  tips

7) மொத்தமாக வாங்கி வைக்கும் பருப்புகளில் சிறிது உலர்ந்த அதாவது நன்கு காய்ந்த வேப்ப இலைகளை போட்டு வைக்கலாம். பிரியாணி இலைகளும் பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்கும் தன்மை கொண்டவை. பிரிஞ்சி இலைகளை பருப்பு டப்பாக்களில் போட்டு வைக்க வண்டு, பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கும்  பாரம்பரிய முறையாகும்.

8) பல தலைமுறைகளாக பின்பற்றப்படும் எளிய குறிப்பு... நான்கு பூண்டு பற்களை உரிக்காமல் பருப்பு டப்பாக்களில் போட்டு கலந்து விட வண்டு, பூச்சிகள், எறும்புகள் தலை தெறிக்க ஓடி விடும்.

9) அதேபோல் நான்கு ஐந்து கிராம்புகளை பருப்பு டப்பாக்களில் போட்டு வைக்கலாம்.

10) வசம்பை பொடித்து ஒரு பேப்பரில் பொட்டலமாக கட்டி பருப்பு டப்பாக்களில் போட்டு வைக்க வண்டு, புழு, பூச்சிகள் அண்டாது.

11) பருப்புகளை கொட்டி வைக்கும் டப்பாக்களில் நான்கு அல்லது ஐந்து  மிளகாய் வற்றலை போட்டு வைப்பது எளிமையான மற்றும் பயன் தரும் குறிப்பாகும்.

12) குளிர்சாதன பெட்டியில் இடம் இருந்தால் பருப்புகளை வாங்கியதும் ஃப்ரீசரில் போட்டு சேமிக்கலாம். இவை பூச்சிகள் வராமல் தடுப்பதுடன் நீண்ட காலத்திற்கு பிரஷ்ஷாக வைத்திருக்கவும் உதவும்.

இதையும் படியுங்கள்:
சீஸ் ரைஸ் பால்ஸ், சின்ன சோளம் தோசை மற்றும் பிரட் மசாலா பணியாரம் செய்வோமா?
Samayal awarness  tips

13) அடிக்கடி தேவைக்காக வெளியில் எடுக்கும் பொழுது தேவையானவற்றை சிறிய டப்பாவில் எடுத்து வைத்துக்கொண்டு மீதி உள்ளவற்றை ஜிப்லாக் பாக்கெட்டுகளில் போட்டு பிரீசரில் வைக்கலாம்.

14) வருடாந்திர சாமானாக வாங்கி சேமிப்பவர்கள் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை பருப்பு வகைகளை வெளியில் எடுத்து சூரிய ஒளியில் சிறிது நேரம் வைத்து பின்பு பத்திரப்படுத்துவது நீண்ட நாட்கள் கெடாமல் புதியது போலவே பாதுகாக்க உதவும்.

15) சில சமயங்களில் கவனக்குறைவால் பருப்புகளை பாதுகாக்க மறந்து விடுவோம். அம்மாதிரி சமயங்களில் வண்டு அல்லது பூச்சி பிடித்தால் கவலைப்படாமல் பருப்பை ஒரு பெரிய தட்டில் கொட்டி வெயிலில் மொட்டை மாடியில் அல்லது பால்கனியில் வைத்துவிட பூச்சிகள் காணாமல் ஓடிவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com