
கலவை அல்வா
செய்ய தேவையான பொருட்கள்:
கேரட் துருவல்- ஒரு கப்
பீட்ரூட் துருவல்- ஒரு கப்
வெண்பூசணி துருவல்-ஒருகப்
லேசாக வறுத்த கடலை மாவு- ஒரு கப்
லேசாக வறுத்த மைதா மாவு -ஒரு கப்
மிதமாக வறுத்த ரவை -ஒரு கப்
பால்கோவா -ஒரு கப்
பால் -மூன்று கப்
சர்க்கரை -9 கப்
நெய்- 3 கப்
பச்சை கற்பூரம் -ஒரு சிட்டிகை
ஏலப்பொடி -2 சிட்டிகை
பாதாம் ,முந்தரி, பிஸ்தா மூன்றும் சேர்த்து நறுக்கியது- ஒரு கப்
செய்முறை:
ஒரு அடிகனமான பெரிய வாணலியில் மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கலந்து மிதமான தீயில் வைத்து கைவிடாமல் நிதானமாக கிளறி, கலவை நன்றாக சுருண்டு வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி பரத்தி ஒரு டபராவால் நன்றாக அழுத்திவிட்டு பின்னர் துண்டுகள் போடவும். சுவை அசத்தலக இருக்கும்.
இதை செய்வது மிகவும் எளிது. பாகுபதம் மாறிவிடுமோ முறுகி இறுகிவிடுமோ என்ற பயமில்லை. புதிதாக ஸ்வீட் செய்ய ஆரம்பிப்பவர்கள் இதுபோன்ற ஸ்வீட் வகைகளை செய்து கற்றுக் கொண்ட பின் மற்றவைகளையும் செய்ய கற்றுக்கொள்ளலாம். எளிதாக பயமின்றி செய்ய இதுபோன்ற இனிப்பு வகைகள் சிறந்தது.
திணை அல்வா:
செய்ய தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி, பச்சரிசி 2ம் சேர்த்து- அரை கப்
திணை- அரை கப்
தேங்காய்த் துருவல்- ஒரு கப்
வெல்லம்- ஒரு கப்
நெய் -2 டேபிள் ஸ்பூன்
முந்திரி, திராட்சை வறுத்தது-
ரெண்டு டேபிள் ஸ்பூன்
பச்சை கற்பூரம், ஒரு சிட்டிகை
ஏலப்பொடி -ஒரு சிட்டிகை
செய்முறை:
அரிசிகளை கழுவி நன்றாக ஊறவைத்து அதை தேங்காய் துருவலுடன் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் அடிகனமான பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு வெல்லத்தைப் போட்டு கொதிக்க விடவும். நன்கு கொதித்த உடன் அதில் அரைத்த விழுதை சேர்த்து அடி பிடிக்காமல் கிளறி, அதனுடன் நெய், பச்சை கற்பூரம், ஏலப்பொடி, முந்திரி, திராட்சை அனைத்தையும் போட்டு சுருள கிளறி நெய் தடவிய தட்டில் கொட்டி அழகாக துண்டங்கள் போட்டு, ஆறவிட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.