
முறுக்கு லட்டு என்பது இனிப்பு மற்றும் கை முறுக்கு கலவையாகக் கருதப்படும் ஒரு சுவையான மற்றும் தனிச்சிறப்பு வாய்ந்த இனிப்பு.
தேவையான பொருட்கள்:
சிறிய முறுக்கு – 10–12
நெய் – 2 மேசை கரண்டி
சர்க்கரை – 1 கப்
தண்ணீர் – ½ கப்
ஏலக்காய் பொடி – ¼ மேசை கரண்டி
தேங்காய்துருவல் – 2 மேசை கரண்டி
செய்முறை: வீட்டில் முறுக்கு தயார் செய்திருந்தால் சிறிய துண்டுகளாக மிதமாக நொறுக்கவும். தூளாகக்கூடாது. ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும். சர்க்கரை முழுமையாக கரைந்து சிறு பாகு வரும்வரை (ஒரு நூல் பாகு) காய்ச்சி இறக்கவும். சிரப்பை அடுப்பிலிருந்து இறக்கி உடனே முறுக்குத் துண்டுகளைச் சேர்க்கவும். நெய் மற்றும் ஏலக்காய்பொடி சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
இறுதியில் தேங்காய் துருவல் சேர்க்கலாம். கைகளில் சிறிது நெய் தடவி, கலவையை இன்னும் சூடாக இருக்கும்போது உருட்டி லட்டுகளாக மாற்றவும். சிறிது நேரம் காற்றில் வைக்கும்போது உறைந்துவிடும்.
சர்க்கரை பாகு சரியான நிலைக்கு வந்திருக்க வேண்டும் இல்லையெனில் லட்டு சுருங்கிவிடும். இது ஒரு சுவையான மற்றும் மாறுபட்ட இனிப்பாகும்.
தால் தோக்லி (Dal Dhokli)
இது ஒரு பாரம்பரிய குஜராத்தி மற்றும் மஹாராஷ்டிரிய உணவாகும்.
தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு – ½ கப்
தக்காளி – 1 (நறுக்கியது)
மஞ்சள்தூள் – ¼ தேக்கரண்டி
இஞ்சி-பூண்டு பேஸ்ட் – 1 தேக்கரண்டி
புளி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
வெல்லம் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை – சிறிதளவு
தோக்லிக்காக
கோதுமை மாவு – 1 கப்
மஞ்சள்தூள் – ¼ தேக்கரண்டி
மிளகாய்தூள் – ½ தேக்கரண்டி
ஓமம் – ¼ தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 தேக்கரண்டி
தண்ணீர் – மாவு பிசைய தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – ½ தேக்கரண்டி
சீரகம் – ½ தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – ½ தேக்கரண்டி
வரமிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
செய்முறை: துவரம்பருப்பை நன்கு கழுவி 3 விசில் வரும்வரை நன்கு சமைத்துக்கொள்ளவும். பிறகு அதை நன்கு மசித்து வைக்கவும். கோதுமை மாவுடன் மஞ்சள், மிளகாய்த்தூள், ஓமம், உப்பு, எண்ணெய் சேர்த்து மென்மையான மாவாக பிசையவும். அதை சப்பாத்தி போல பரப்பி, சதுரம் அல்லது டைமண்ட் வடிவில் நறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பிறகு நறுக்கிய தக்காளி, இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். பிறகு மசித்த பருப்பு, தேவையான தண்ணீர், உப்பு, சர்க்கரை மற்றும் சிறிது புளி சேர்த்து கொதிக்கவிடவும். குழம்பு கொதிக்கும்போது, நறுக்கிய தோக்லி துண்டுகளை ஒன்றின் பின் ஒன்றாக சேர்க்கவும்.
10–15 நிமிடங்கள் மிதமான தீயில் நன்கு வேகவிடவும். தோக்லி வெந்து மிதக்கும். கொத்தமல்லி இலை தூவி, சூடாக பரிமாறவும். மேலே நெய் சில சொட்டுகள் சேர்க்கலாம் விருப்பப்பட்டால். இது சோறு இல்லாமல் சாப்பிடக்கூடிய ஒரு முழு உணவாகும்.