பத்து நிமிடத்தில் மிகவும் சுவையான கருப்பட்டி மக்கானா செய்துவிடலாம். இதனை 20, 30நாட்கள் வைத்திருந்து சாப்பிடலாம்.
மிகவும் ருசியான கருப்பட்டி மக்கானா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
மக்கானா 2 கப்
கருப்பட்டி ஒரு கப்
கருப்பு (அ) வெள்ளை எள் 2 ஸ்பூன் நெய் 2 ஸ்பூன்
உப்பு ஒரு சிமிட்டு
முதலில் வாணலியில் ஒரு கப் கருப்பட்டி சேர்த்து சிறிதளவு நீர் விட்டு நன்கு கொதிக்க விட்டு வடிகட்டி எடுத்து வைக்கவும். ஒரு பானில் சிறிது நெய் விட்டு மக்கனாவைப் போட்டு நன்கு கிரிஸ்பியாகும் வரை வறுத்தெடுக்கவும். வாணலியில் சிறிது நெய் விட்டு வடிகட்டிய கருப்பட்டி நீரை சேர்த்து ஒரு சிமிட்டு உப்பு போட்டு நன்கு பாகு காய்ச்சவும். (சில துளிகள் பாகை நீரில் விட்டு கையால் உருட்ட உருண்டு வரவேண்டும்) இப்பொழுது நாம் வறுத்து வைத்துள்ள மக்கானாவை சேர்த்து இரண்டு ஸ்பூன் கருப்பு அல்லது வெள்ளை எள்ளை போட்டு நன்கு கலந்து விடவும். ஆறியதும் காற்று புகாத டப்பாவில் போட்டு பத்திரப்படுத்த ஒரு மாதமானாலும் மொறுமொறுப்பான சத்தான ஈவினிங் ஸ்நாக்ஸ் தயார்.
மொறுகலான சட்டி தோசை!
அரிசியை ஊறவைக்க வேண்டாம். அரைக்க வேண்டாம். வெறும் உளுந்து மட்டும் போதும். முருகலான மொறு மொறு சட்டி தோசை சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
உளுந்து ஒரு கப்
ரவை அரை கப்
உப்பு
இஞ்சி 1 துண்டு
பச்சை மிளகாய் 3
சீரகம் ஒரு ஸ்பூன்
நல்லெண்ணெய் சிறிது
உளுந்தை களைந்து தண்ணீர் விட்டு இரண்டு மணி நேரம் ஊற விடவும். ரவையை தேவையான அளவு நீர் விட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
முதலில் உளுந்தை நன்கு அரைத்து எடுக்கவும். அதில் ஊறிய ரவை, தேவையான அளவு உப்பு சேர்த்து 6 மணி நேரம் புளிக்க விடவும்.தோல் நீக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைத்து தயாராக உள்ள மாவில் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் நான்கு ஸ்பூன் விட்டு அரைத்த மாவில் பாதியை விட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து தட்டை போட்டு மூடி வேக விடவும். நன்கு பொன்முறுவலாக ஆனதும் திருப்பி விட்டு நன்கு சிவந்ததும் எடுக்க மிகவும் ருசியான சட்டி தோசை தயார். இதனை பீட்சா கட்டர் கொண்டு கட் செய்து மிளகாய் பொடி நல்லெண்ணெயில் குழைத்தது,தக்காளி சட்னியுடன் பரிமாறவும்.