அன்றாட சமையலில் உபயோகப்படுத்தும் தேங்காயின் பயன்பாடுகள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி நாம் நன்றாகவே அறிவோம். அதிலுள்ள நார்ச்சத்து, நல்ல கொழுப்பு, வைட்டமின்கள், மினரல்கள் போன்றவை மற்றும் தேங்காய் எண்ணெயும் பலவித நன்மைகளைத் தரக்கூடியவை. அதேபோல், தேங்காய் பூவிலிருக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் தெரிந்துகொள்வோம்.
தேங்காயை முளைக்கவைத்து அதிலிருந்து இளந்தளிர் வெளிவரும் நிலையில் தேங்காயின் உள்ளே வெண்மையான நிறத்தில் ஒரு அரை வட்ட பந்து வடிவில் ஒரு பொருள் வெளிப்படும். அது உண்ணக்கூடியதுதான். இது அதிக சத்து நிறைந்தது. இதுவே தேங்காய்ப் பூ என்பதாகும்.
தேங்காய்ப் பூவில் ஃபினோலிக் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் கூட்டுப்பொருட்கள் அதிகம். அவை நம் உடலின் ஃபிரிரேடிகல்களின் அளவை சமநிலையில் வைக்கவும், ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ்ஸினால் வரும் தீமைகளிலிருந்து உடலைக் காக்கவும் உதவுகின்றன.
இதிலுள்ள டயட்டரி நார்ச்சத்துக்கள் ஜீரண மண்டல உறுப்புகள் சிறப்பாக செயல்படவும், மலச் சிக்கலைத் தடுக்கவும் உதவுகின்றன. மேலும், பசியுணர்வு ஏற்படுவதை அதிக நேரம் தாமதிக்கச் செய்வதால் உட்கொள்ளும் கலோரி அளவு குறைகிறது; இதனால் உடல் எடையை சமநிலையில் பராமரிப்பதும் சாத்தியமாகிறது.
இதிலுள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் கொலஸ்ட்ரால் அளவை சமநிலைப்படுத்தி இதய நோய்கள் வரும் ஆபத்தைத் தடுக்கின்றன. நார்ச்சத்து குளுகோஸ் அளவை மெதுவாக இரத்தத்தில் கலக்கச் செய்து இரத்த சர்க்கரை அளவு உயராமல் பாதுகாக்கிறது. தேங்காய்ப் பூவில் உடனடி சக்தி தரக்கூடிய கார்போஹைட்ரேட் சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை உடற்பயிற்சி செய்வதற்கு முன்னும் பின்னும் தேவைப்படும் சக்தியை அளிக்க வல்லவை.
இதிலுள்ள மாங்கனீஸ் போன்ற கனிமச் சத்துக்கள் ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கும் பராமரிப்பிற்கும் உதவுகின்றன. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச் சத்துக்களானவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து, உடலை தொற்று நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராட எந்த நேரமும் தயார் நிலையில் வைக்க உதவுகின்றன; நோயையும் விரைவில் குணமடையச் செய்கின்றன. வைட்டமின் E மற்றும் இரும்புச் சத்து சருமத்தின் எலாஸ்ட்டிசிட்டியை பராமரிக்கவும், ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கும் உதவுகின்றன.
இத்தனை நன்மைகள் தரக்கூடிய தேங்காய்ப் பூவை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நாமும் உண்டு உடல் ஆரோக்கியம் காப்போம்.