
தேவை:
சுத்தம் செய்த சோளம் 1 1/2 கப்
உளுத்தம் பருப்பு 1/2 கப்
வெந்தயம் 1/2 டீஸ்பூன்
உப்பு தேவையானது
வெங்காயம் 2
கேரட் 1
சிம்லா மிர்ச்சி 1
சீரகம் 1/2 டீஸ்பூன்
கடுகு 1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1/2 டீஸ்பூன்
கறி வேப்பிலை கொஞ்சம்
பச்சை மிளகாய் 5
இஞ்சி 1 சிறு துண்டு
ரீஃபைன்டு ஆயில் 100 மி.லி.
தண்ணீர் தேவையானது.
செய்முறை:
சுத்தம் செய்த சோளத்தை வாயகன்ற பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் விட்டு சுமார் 5 மணிநேரம் ஊறவிடவும்.
உளுத்தம் பருப்பை சுத்தம் செய்து, வெந்தயத்துடன் சேர்த்து தண்ணீரில் ஊறவைக்கவும்.
ஊறிய சோளத்தை கர-கரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
உளுந்து-வெந்தயத்தை அலம்பி நன்கு அரைத்தெடுத்து சோளமாவுடன் சேர்த்து, தேவையான உப்பு போட்டு கலக்கவும். இரவு இதை தயார் செய்து வைத்தால், காலையில் சற்று புளிப்புடன் இருக்கும்.
வெங்காயம், கேரட், சிம்லா மிர்ச்சி, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவைகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அடிக்கனமான வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு வறுத்த பின், நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், கேரட், சிம்லா மிர்ச்சி, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை போன்றவைகளையும் அத்துடன் எண்ணெயில் சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
சற்றே ஆறிய பிறகு, சோளமாவுக் கலவையில் போட்டு மிக்ஸ் செய்யவும்.
குழிப்பணியார பாத்திரத்தை அடுப்பில் வைத்து, ஒவ்வொரு குழியிலும் சிறிது எண்ணெய்விட்டு சூடானதும், வெஜிடபிள் மிக்ஸ்ட் சோளமாவை கொஞ்சமாக எடுத்து அதில் விட்டு பெரிய தட்டு ஒன்றை மேலாக வைத்துமூடவும். அடுப்பை சிம்மில் வைக்கவும்.
2-3 நிமிடங்கள் சென்று, தட்டை திறந்து, ஒரு பக்கம் வெந்ததை திருப்பிக்கொடுக்கவும். மீண்டும் தட்டால் மூடவும். பின்னர் அதைத் திறக்கையில் பொன்னிறத்தில் இரு பக்கமும் உப்பலாக வெந்திருக்கும். இப்போது வெஜ் மிக்ஸ்ட் சோளமாப் பணியாரம் ரெடி.
தொட்டுக்கொள்ள சட்னி தேவை கிடையாது. அப்படியே சாப்பிடலாம்.
மிகவும் டேஸ்ட்டியாக இருக்கும் இந்த "வெஜ் மிக்ஸ்ட் சோளமாப் பணியாரம்" காலை- மாலை டிபனுக்கு ஏற்றது. அனைவரும் விரும்பிச் சாப்பிடும் ஹெல்த்தியான, சிறப்பான ஐட்டம் இது.