டோஃபு உபயோகித்து வேகன்களுக்கேற்ற (Vegans) 5 வகை உணவுகள் சமைப்போமா?
1. டோஃபு டிக்கி (Tofu Tikki ):
தேவையான பொருட்கள்: கெட்டியான டோஃபு, இசப்கோல், உருளைக்கிழங்கு, வெங்காயம், கொத்தமல்லி இலைகள், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் ஸ்பைஸஸ்.
செய்முறை: டோஃபுவைப் பிழிந்து உதிர்த்துக் கொள்ளவும். உருளைக் கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். பின் அனைத்துப் பொருள்களையும் உப்பு சேர்த்து நன்கு பிசையவும். பிசைந்த மாவை டிக்கிகளாக்கி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
2. டோஃபு புர்ஜி (Tofu Bhurji):
தேவை: 200 கிராம் டோஃபு, தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி இலைகள், பச்சை மிளகாய், எண்ணெய், உப்பு, சீரகத் தூள், மிளகுத் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா பவுடர்.
செய்முறை: டோஃபுவை உதிர்த்து வைத்துக் கொள்ளவும். காய்களை நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் உப்பு, சீரகத் தூள், மிளகுத் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா பவுடர் சேர்த்து மிதமான தீயில், கருகிவிடாமல் வதக்கவும். பின் கொத்தமல்லி இலைகள், உதிர்த்து வைத்த டோஃபு சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.
3. ஸ்டிர் ஃபிரைட் டோஃபு (Stir-Fried Tofu):
தேவை: நல்லெண்ணெய், டோஃபு, மக்காச்சோள மாவு, வெள்ளை எள், பிரவுன் சுகர், பூண்டுப் பற்கள், குடை மிளகாய், ஸ்பிரிங் ஆனியன், சோய் சாஸ், ரைஸ் வினிகர் மற்றும் ஸ்ரீரச்சா.
செய்முறை: மக்காச்சோள மாவில் டோஃபுவைப் புரட்டி எடுத்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பின் மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் எள், பூண்டு, குடை மிளகாய், ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து வதக்கவும். காய் முக்கால் பாகம் வெந்ததும், சுகர், டோஃபு, மற்ற சாஸ் வகைகள், வினிகர் சேர்த்து கலந்து இறக்கவும். மல்லி இலை தூவி அலங்கரித்துப் பரி மாறவும்.
4. நேபாளி கீட்டோ டோஃபு:
தேவை: நல்லெண்ணெய், நறுக்கிய இஞ்சி பூண்டு, டைஸ்டு டோஃபு, ஆஸ்பராகஸ், மஷ்ரூம், பீன்ஸ், ப்ரோகொல்லி, குடை மிளகாய், ஸ்பிரிங் ஆனியன், சோயா சாஸ், சில்லி சாஸ்.
செய்முறை: நல்லெண்ணெயில் டோஃபுவை சாட் (saute) செய்யவும். பின் அதனுடன் இஞ்சி, பூண்டு, சாஸ் வகைகள் சேர்க்கவும். காய்களை நறுக்கி ஒரு கோப்பையில் வரிசையாக அடுக்கவும். அதன் மேற்பரப்பில் டோஃபு கலவையை வைத்து, மல்லித தழை தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.
5. முழு கோதுமை பிரட் டோஃபு டோஸ்ட் :
தேவை: டோஃபு, முழு கோதுமை பிரட், வெங்காயம், தக்காளி, மல்லித் தழை, உப்புத் தூள், மிளகுத் தூள்.
செய்முறை: டோஃபு, வெங்காயம், தக்காளி, உப்புத் தூள், மிளகுத் தூள் ஆகியவற்றை கலந்து சூடாக்கவும். இக்கலவையை, டோஸ்ட் செய்த பிரட் துண்டுகள் மீது பரட்டி மல்லித் தழை தூவி அலங்கரிக்கவும். சூடாக உட் கொள்ளவும்.