
1. பிரட்டை டோஸ்ட் செய்யும்போது பால் பவுடரை சிறிது தண்ணீரில் கரைத்து, பிரட்டின் மீது ஊற்றி செய்தால் டேஸ்ட் சூப்பராக இருக்கும்.
2. ஒரு பிடி பழைய சாதத்தை அரைத்து, தோசைமாவுடன் கலந்து தோசை வார்த்தால், கல்லில் ஒட்டாத சுவை மிகுந்த பேப்பர் ரோஸ்ட் தயார்.
3. வாழைத்தண்டுடன் பருப்பு, இஞ்சி, பூண்டு சேர்த்து கூட்டாக செய்து சாப்பிட்டால் ருசியோடு உடலுக்கும் நல்லது.
4. எந்த சுண்டல் செய்தாலும், இறக்கிவைத்து சிறிதளவு எலுமிச்சைச் சாறு கலந்துவிட்டால் சுண்டல் அதிக சுவையாக இருக்கும்.
5. சப்பாத்தி மாவு பிசையும்போது கால் டம்ளர் பால் விட்டுப் பிசைந்தால், ஒரு துளிகூட எண்ணெய் விடாமலே "புஸ்" னு சப்பாத்தி ரெடி.
6. வெண்டைக்காய்களின் காம்புகளையும், தலைப்பகுதிகளையும் நறுக்கிவிட்டு வைத்தால், மறுநாள் சமைக்கும் வரை முற்றிப் போகாமல் இருக்கும்.
7. எவ்வகை உப்புமா செய்தாலும் அரைக்கீரையை பொடியாக நறுக்கி சேர்த்தால் உப்புமா சுவையாக இருக்கும்.
8. பருப்புத் துவையல் அரைக்கும்போது கடைசியில், பச்சைப்பூண்டு நான்கு பல் சேர்த்து அரைத்து எடுத்தால் துவையல் சுவையாக இருக்கும்.
9. வற்றல் குழம்பு செய்யும்போது கடைசியாக, சிறிது மஞ்சள் பொடியும், மிளகு பொடியும் கலந்தால் குழம்பின் சுவையே அலாதிதான்.
10. இரவில் சாதத்தில் தண்ணீர் ஊற்றும்போது, சிறிதளவு உப்பைக்கலந்து வைத்தால் காலையில் கூழாக மாறாது.
11. சாம்பார் மணமாகவும், ருசியாகவும் இருக்க, ஒரு தேக்கரண்டி எண்ணெய், சிறிது கறிவேப்பிலை இரண்டையும் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி சாம்பாரில் போட்டு மூடி வைத்தால் போதும்.
12. தயிர் பச்சடி நீர்த்துப்போய்விட்டால், சிறிது வேர்க்கடலையை வறுத்து மிக்ஸியில் நைசாகப் பொடி செய்து கலந்து விடுங்கள். பச்சடி கெட்டியாகிவிடும். சுவையும் நன்றாக இருக்கும்.