கோடைக்காலத்தில் உடல் வெப்பத்தைக் குறைக்கும் நீர் காய்களான வெள்ளரி, பூசணி, சுரைக்காய் பீர்க்கை போன்றவைகளை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வது அவசியம். சத்து நிறைந்த நீர்க் காயான தோசக்காயை (Yellow Cucumber) பச்சடியாகவோ, பருப்பில் கலந்தோ உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள உடலுக்கு குளிர்ச்சியுடன் ஆரோக்கியமும் கிடைக்கும். சுவையான தோசக்காயா பச்சடி செய்முறையைப் பார்ப்போம்.
தேவை:
தோசக்காய் - 1 பெரியது
நிலக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் - 6
எள் - 1 டீ ஸ்பூன்
புளி - சிறிது
பூண்டு - 5 பல்
எண்ணெய், உப்பு- தேவைக்கேற்ப
தாளிக்க : கடுகு, சீரகம், கடலைப் பருப்பு தலா ஒரு டீ ஸ்பூன், வர மிளகாய் - 2, சிறிது கருவேப்பிலை
செய்முறை: தோசக்காயின் தோல், விதைகளை அகற்றி சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் நிலக்கடலையைப் போட்டு வறுபட்டதும் பச்சை மிளகாய், சீரகம், எள், பூண்டுப் பற்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். கடைசியாக தோசக்காய் துண்டுகளைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கிய பின் ஆற விட்டு உப்பு, புளியுடன் அரைத்தெடுக்கவும்.
தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து அரைத்த பச்சடியுடன் கலந்தால் சுவையான தோசக்காயா பச்சடி ரெடி. சூடான சாதத்தில் நெய்யுடன் இந்தப் பச்சடியைக் கலந்து சாப்பிட செம டேஸ்ட்டாக இருக்கும்.