
தும்பைப் பூ துவையல்:
சாலை ஓரங்களிலும், வேலி ஓரங்களிலும் என எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும் தும்பைச் செடியின் வேர், இலை, பூ என எல்லாமே சித்த மருத்துவத்தில் மருந்தாக பயன்படுகிறது. மார்புச் சளியை கரைத்து வெளியேற்றும் அற்புத குணம் கொண்ட தும்பைப் பூ கொண்டு துவையல் எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.
தும்பைப் பூ 1 கைப்பிடி
புளி சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு தேவையானது
மிளகு 1/2 ஸ்பூன்
மிளகாய் 1
தேங்காய் துருவல் 2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் 4
பூண்டு 2 பல்
கறிவேப்பிலை சிறிது
தேங்காய்த் துருவல், மிளகாய், தோல் நீக்கிய சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றை வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும். தும்பைப் பூவை சூடான வெறும் வாணலியில் போட்டு ஒரு பிரட்டு பிரட்டி எடுக்கவும். தேவையான உப்பு, புளி, மிளகு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து துவையல் பதத்திற்கு அரைத்தெடுக்கவும்.
இதனை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசை, பொங்கலுக்கு தொட்டுக் கொள்ளலாம். வாரத்தில் இரண்டு நாட்கள் தும்பை பூ துவையல் செய்து சாப்பிட மார்பு சளி அனைத்தும் கரைந்து வெளியே வந்துவிடும்.
தும்பைப் பூ ரசம்:
தும்பைப் பூ 1/2 கப்
தும்பை இலை 4
புளி சிறிய எலுமிச்சையளவு
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
மிளகு 1 ஸ்பூன்
சீரகம் 1/2 ஸ்பூன்
இஞ்சி 1 துண்டு
பூண்டு 4 பற்கள்
தக்காளி 1
உப்பு தேவையானது
தாளிக்க:கடுகு, நெய், கறிவேப்பிலை
இஞ்சி, பூண்டை தோல் நீக்கி தட்டிக்கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். புளியை நீர்க்க கரைக்கவும். வாணலியில் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை சேர்த்து கடுகு பொரிந்ததும் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை விட்டு உப்பு, மஞ்சள் தூள், தக்காளி, பொடித்த மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும். புளி வாசனை போனதும் மேலும் ஒரு கப் தண்ணீர் விட்டு சுத்தம் செய்த தும்பைப் பூக்களையும், இலைகளையும் கையால் நன்கு கசக்கி சேர்த்து மொச்சு வந்ததும் (கொதிக்க விட வேண்டாம்) தட்டை போட்டு மூடிவிடவும்.
சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு இந்த தும்பைப் பூ ரசத்தை சேர்த்து சாப்பிட சளி, இருமல் சரியாவதுடன் தொண்டைக்கும் இதமாக இருக்கும்.
தும்பைப் பூ எண்ணெய்:
தும்பை பூ 1 கைப்பிடி
நல்லெண்ணெய் 1 கரண்டி
தலைபாரம், தலைவலி, இருமல், ஜலதோஷத்திற்கு தும்பைப் பூவை பறித்து வந்து ஒரு கரண்டி நல்லெண்ணெயில் போட்டு நன்கு காய்ச்சி பொறுக்கும் சூட்டில் தலையில் தேய்த்து வெந்நீரில் குளித்து விட உடனடி நிவாரணம் கிடைக்கும்.