

அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களே மருந்தாக பயன்படுகிறது. அப்படி உணவே மருந்தாகும் சில உணவுப்பொருட்கள்:
பயத்தம் பருப்பை குழைய வேகவைத்து சிறிது வறுத்த சககசாவை பொடித்துப் போட்டு கடைசியில் தேங்காய் பால் விட்டு பாயசம் போல் செய்து சாப்பிட அல்சர் குணமாகும்.
உப்பு, புளி, பெருங்காயம், மிளகு எல்லாவற்றையும் தனித்தனியே சூடான வாணலியில் வறுக்கவும். இதனுடன் கறிவேப்பிலை சேர்த்து துவையலாக அரைத்து சாப்பிட வாயுகோளாறு நீங்கிவிடும்.
பூண்டு, வெங்காயம், தக்காளி, நச்சுக்கொட்டை கீரை சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகு, சீரகம் சேர்த்து அரைத்து சட்னி செய்து சாப்பிட வாதம் மறையும்.
பலத்த விருந்து சாப்பிட்ட சிறிது நேரம் கழித்து பால் சேர்க்காமல் தண்ணீரில் ஒரு துண்டு நசுக்கிய இஞ்சி, புதினா சேர்த்து தயாரித்த டீ போட்டுக்குடிக்க வயிறு சுத்தமாகி அமைதி அடையும்.
கூட்டு, குருமா செய்யும்போது அத்துடன் ஒரு கைப்பிடி முளைகட்டிய பயிரை சேர்த்து சமைக்கவும். இதனால் சுவை கூடுவதுடன் புரதச் சத்தும் பல மடங்கு அதிகமாகக் கிடைக்கும். இதனால் ஊட்டச்சத்து குறைபாடு நீங்கும்.
முளைக்கீரைத் தண்டுகளை பொடியாக நறுக்கி பொரியல் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். ஊளைச் சதையையும் குறைக்கும்.
சாமை அரிசி வடித்த கஞ்சியில் ரசம் வைத்து சாப்பிட்டால் வயிறு சுத்தமாகும்.
முட்டையில் உள்ள பல்வேறு புரதங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலமிக்கதாக மாற்றுகின்றன.
சாம்பார் பெரும்பாலும் துவரம் பருப்பில்தான் செய்வார்கள். இது புரதச்சத்து நிறைந்தது. மிளகு, மல்லி போன்றவை சாம்பார் அரைக்கும் பொடியில் சேர்க்கப் படுவதால், சளி, இருமலை சீர் செய்யும் திறன் இதற்கு உண்டு.
தினசரி சமையலில் பெருங்காயத்திற்கு முக்கிய பங்கு உண்டு. இது செரிமான சக்தியை மேம்படுத்தும் திறன் கொண்டது.
சமையலில் மஞ்சள் சேர்க்கப்படுவதால் அது நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கி, புற்றுநோய் வரவிடாமல் தடுக்கிறது.
கறிவேப்பிலை இது இரும்பு சக்தி நிரம்ப உடையது. அன்றாட சமையலில் அருமருந்தாக, வாசனைக் கூட்டியாக, செயல்படுவது இது. இளநரையை தடுக்க வல்லது.
சீரகத்தை வறுத்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும். ஓமத்துடன் சாப்பிட்டால் வாயு தொல்லை நீங்கும். உணவில் கருப்பட்டியை பயன்படுத்தினால் பற்களும் நரம்புகளும் உறுதியாகும்.
கருப்பட்டி பெண்களின் கருப்பைக்கு மிகவும் ஏற்றது. சுக்கு, மிளகு கலந்த கருப்பட்டியை பிரசவித்த பெண்கள் சாப்பிட்டால் தாய்ப்பால் நன்றாக சுரக்கும். குழந்தைக்கும் நல்ல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
ரோஜா இதழ்களை நிழலில் காயவைத்து கொள்ளவும். அவை நன்கு காய்ந்ததும் ஏலக்காய், சுக்கு சேர்த்து நன்கு பொடித்துக்கொள்ளவும். தினமும் இதனை வெதுவெதுப்பான தண்ணீரில் தேன் கலந்து பருகி வந்தால் உடல் சூடு மட்டுமல்ல எடையும் குறையும்.
மாதுளம் பழ ஜூஸில் தேன் கலந்து பருகி வர பித்தம் குறையும்.
பெரிய நெல்லிக்காய், கறிவேப்பிலையை கரும்பு சாற்றில் ஊறவைத்து அதனுடன் சீரகம் சிறிது உப்பு கலந்து சட்னி போல் அரைத்து சாப்பிட இளநரை மறையும்.
அருநெல்லிக்காயுடன் உப்பு, இரண்டு மிளகு, கால் டீஸ்பூன் சீரகம் வைத்து அரைத்து கடைந்த மோருடன் குடிக்க காமாலை குணமாகும்.
பெரிய நெல்லிக்காயுடன் மிளகு சேர்த்து அரைத்து நீர் விட்டு வடிகட்டவும். இதில் தேனை கலந்து ஜூஸாக குடிக்க மூக்கடைப்பு விலகும்.
செர்ரி பழங்களை பொடியாக நறுக்கி மாதுளை சாற்றில் ஊறவிடவும். மாலையில் இத்துடன் ஒரு சிட்டிகை கசகசா பொடியை கலந்து சாப்பிட நன்றாக தூக்கம் வரும். உடல் ரிலாக்ஸ் ஆகும்.
அத்திப்பழம் பேரிச்சை பழம் சமஅளவு எடுத்து அரைத்துக் கொள்ளவும். பனைவெல்லத்தில் பாகு வைத்து அரைத்த விழுதுகள் சேர்த்து ஜாம் போல செய்து அடிக்கடி சாப்பிட ரத்தசோகை நீங்கும்.