

கேரட் ஊறுகாய் தயாரிக்கும்போது அருநெல்லிக்காய் களையும், பச்சை மிளகாய்களையும் பொடிப்பொடியாக நறுக்கி மிக்ஸ் பண்ணினால் ஊறுகாய் நல்ல சுவையுடன் இருக்கும்.
முதல் நாள் மீதமான அடை மாவை மறுநாளும் உபயோகப்படுத்தினால் அவ்வளவு நன்றாக இருக்காது. மாறுதலாக அதை இட்லித்தட்டில் வைத்து, அரிந்து வேக வைத்த கொத்தவரங்காயுடன் சேர்த்து உசிலி செய்தால் சுவையோ சுவை.
தேங்காய்த் துவையலுக்குத் தேவையான சாமான்களை தாளித்து எடுக்கும்போது சிறிது தனியாவையும் சேர்த்து வறுத்து அரைத்தால் துவையல் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
மிளகாய் பஜ்ஜி போடும்போது குறுக்கு வாட்டில் நறுக்கப்பட்ட மிளகாயின் உட்புறத்தில் தக்காளி சாஸைத் தடவிவிட்டு, பிறகு கடலைமாவில் தோய்த்துப்போட்டால் பஜ்ஜி சுவை மிகுந்து இருக்கும்.
முட்டையை அடிக்கும்போது சிறிது பாலைக்கலந்து அடித்தால் ஆம்லெட் சுவையாக இருக்கும்.
பீட்ரூட், தக்காளி போன்ற காய்கறிகளில் ஸ்வீட் பச்சடி செய்யும்போது வெறும் சர்க்கரையோ அல்லது வெறும் வெல்லமோ போட்டுச் செய்தால் எவ்வளவு போட்டாலும் இனிப்பு வராது. இதைத் தவிர்க்க 2/3 பாகம் வெல்லமும் மீதி சர்க்கரையும் சேர்த்தால் சுவையும் கூடும், செலவும் குறையும்.
நாம் வழக்கமாக செய்யும் பருப்பு அடையில் இரண்டு உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துப் போட்டு கலந்து அடை செய்து பாருங்கள். அடை மிருதுவாக இருப்பதுடன் சுவையாகவும் இருக்கும்.
இட்லி மாவுடன் ஒரு கைப்பிடி முளைவிட்ட பயிறை சேர்த்துக்கிளறி இட்லி வார்க்க சத்தான சூப்பர் இட்லி ரெடி.
சேமியாவுடன் கொஞ்சம் கடலைமாவு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி நறுக்கி உப்பு போட்டு எண்ணெயில் பொரித்து எடுத்தால் மொறு மொறு சேமியா பக்கோடா தயார்.
ஜிலேபி செய்ய பாகு வைத்தால் அது கொஞ்ச நேரத்தில் உறைந்து கெட்டியாகிவிடும். அவ்வாறு உறையாமல் இருக்க பாகில் ஒரு மூடி எலுமிச்சைப் பழம் பிழிந்துவிட்டால் பாகு அதே நிலையில் இருக்கும்.
தேங்காய் நன்றாக காய்ந்ததாக இருந்தால் அதை இரண்டு மணிநேரம் தண்ணீரில் போட்டு விட்டுப் பின்னர் உடைத்தால் சரிசமமாக உடையும்.
இட்லிமாவில் உப்பு போட்டுகரைக்கும்போது சிறிது பெருங்காயத்தைப் போட்டுக் கலந்துவிடுங்கள். இட்லி மணமாக இருப்பதுடன் வாய்வு உபத்திரவும் ஏற்படாது.