-ம. வசந்தி
சாம்பார் இல்லாத விருந்து இல்லை என்ற அளவுக்கு சாம்பார் முக்கியத்துவம் வாய்ந்தது. சாம்பார் சுவையாக இருந்தால் பொது இடமாக இருந்தாலும் கூச்சப்படாமல் இரண்டாவது முறை வாங்கி சாப்பிடுபவர்களும் உண்டு. அதைவிட சாம்பாரின் சுவையில் சாம்பார் வடை, சாம்பார் இட்லி என்ற ஐட்டங்களும் வெகு பிரபலம். தமிழர்கள் வாழும் எல்லா நாடுகளிலும் புகழ்பெற்று நீக்கமற நிறைந்து இருக்கின்றது சாம்பார்.
சாம்பாருக்கும் மராத்திய மன்னர் சாம்பாஜிக்கும் கூட தொடர்பு உண்டு என்று ஒரு கதை இருக்கிறது. சாம்பாஜி, மராட்டிய பேரரசர் சிவாஜியின் மூத்த மகன். வட இந்தியர்கள் பொதுவாக ரொட்டி சப்பாத்திக்கு தால் சேர்த்துக் கொள்வார்கள். அதாவது பருப்பில் செய்வது. ஒரு நாள் சமையல்காரர் வெளியே சென்றுவிட்டார். ரொட்டிக்கு தொட்டுக்கொள்ள ஏதாவது இருக்கிறதா? எனப் பார்த்த சாம்பாஜி தால் தயாரித்திருக்கிறார். அதில் புளி போட்டு இருக்கிறார். சிறிது நேரத்தில் அங்கு வந்த அரண்மனை சமையல்காரர்கள் பொதுவாக பருப்பில் புளி சேர்ப்பதில்லை என கூறியிருக்கிறார்கள்.
'அதனால் என்ன' சுவையாகத்தானே இருக்கிறது என சாம்பாஜி சுவைத்து மகிழ்ந்திருக்கிறார். அதுதான் சாம்பாஜி தயாரித்த சாம்பார் என வழங்கப்படுகிறது. சாம்பாரில் எத்தனை வகைகள் இருந்தாலும் தஞ்சாவூர் சாம்பாருக்கு என்று தனி இடம் உண்டு என்பது உணவியலாளர்களின் கருத்து. அதிலும் வெங்காயம் பூண்டு, சேர்க்காமலே கூட சூப்பைப்போல குடிக்கலாம்.
தஞ்சையை மராட்டியர்கள் ஆளத்தொடங்கிய காலத்தில்தான் சாம்பாரே தயாரானது என்பவர்களும் உண்டு. தஞ்சையை ஆண்டவர் இரண்டாம் மராத்திய அரசர் ஷாஹூஜி.இவர் காலத்தில்தான் அதாவது 17 ஆம் நூற்றாண்டில் சாம்பார் தயாரிக்கப்பட்டது என உணவு வரலாற்றியலாளர் கே.பி அச்சயாவின் குறிப்பு நமக்கு எடுத்துரைக்கிறது.
சாம்பார் கலோரி நிறைந்தது. ஒரு கப் சாம்பாரில் 308 கலோரிகள் உள்ளன. பொட்டாசியம் 265 மி.கி,கொழுப்பு 9 கிராம் பொட்டாசியம் 265 மி. கி நார்ச்சத்து 3 கிராம், சர்க்கரை 3 கிராம்,புரோட்டின் 15 கிராம், சோடியம் 14 மி. கி உள்ளன.அதோடு இரும்புச்சத்தும் வைட்டமின் சி யும் இருக்கின்றன. சாம்பாரில் சேர்க்கப்படும் முக்கியமான ஒன்றான துவரம் பருப்பு அதிக புரோட்டீன் கொண்டது.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அதிக காய்கறிகளை சேர்த்த சாம்பாரை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. ஆனால் சாம்பாரில் சேர்க்கப்படும் புளி, உப்பு ஆகியவை அளவோடு இருக்க வேண்டும். அதிக புளி சேர்த்தால் அலர்ஜி, பல் எனாமல் பாதிக்கப்படுவது, பித்த பைகளில் கற்கள் உருவாவது போன்ற பிரச்சனைகளுக்கு வழி வகுத்துவிடும்.
சாம்பாரை உணவகங்களில் வாங்குவதை விட வீட்டில் ஆரோக்கியமான முறையில் செய்து சாப்பிடுவதுதான் நல்லது. எனவே வீட்டு சாம்பாருக்கு முன்னுரிமை கொடுத்து இட்லி சாம்பாரை ருசித்து உண்போம்.