வண்டிக்கடைகளில் விற்கப்படும் சமோசாக்கள் அதன் தனித்துவமான சுவை மற்றும் மணத்தால் நம்மை ஈர்க்கும். மொறுமொறுப்பான வெளிப்புறத்தின் உள்ளே காரமான சுவையுடைய பூரணம் நம் நாவை நடனமாடச் செய்யும். வீட்டில் ஏன் இவ்வளவு சுவையாக சமோசா செய்ய முடிவதில்லை? என்பது பலரது கேள்வியாக உள்ளது. ஆனால், அது நிச்சயம் முடியும். சிறிது பொறுமையுடன் சரியான பொருட்களைப் பயன்படுத்தி, வீட்டிலேயே வண்டிக்கடை சமோசாவின் சுவையை நாம் அனுபவிக்கலாம். இந்தப் பதிவில் வண்டிக் கடை சமோசா சுவையின் ரகசியங்களைப் பற்றி பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்து, அதில் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர் இதில் எண்ணெய் சேர்த்து கைகளால் நன்றாகப் பிசையவும். அடுத்ததாக தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாகப் பிசைந்து, 30 நிமிடங்கள் ஈரத்துணியால் மூடி வைக்கவும்.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 2
பட்டாணி - 1/2 கப்
கேரட் - 1
பீன்ஸ் - 1/4 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
கசூரி மேத்தி - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் ஆகியவற்றை வேகவைத்து ஒன்றாக சேர்த்து மசித்து கொள்ளவும். பின்னர், வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கவும். இதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், கரம் மசாலா, கசூரி மேத்தி சேர்த்து வதக்குங்கள். இதில் மசித்து வைத்த காய்கறிகள், பட்டாணி, கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும்.
பிசைந்து வைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல தட்டிக் கொள்ளுங்கள். பின்னர் அதை கோன் வடிவத்தில் வெட்டிக் கொள்ளுங்கள்.
இப்போது இதில் தயாரித்து வைத்துள்ள பூரணத்தை நிரப்பி, அதன் விளிம்புகளை மூடி நன்றாக அழுத்துங்கள். கடாயில் பொரிப்பதற்குத் தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும், சமோசாக்களை பொன்னிறமாகும் வரை பொறித்து எடுத்தால், வேற லெவல் சுவையில், வண்டிக்கடை சமோசா தயார்.
வீட்டில் தயாரிக்கும் வண்டிக்கடை சமோசா, கடையில் வாங்கும் சமோசாவை விட சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும், இது வீட்டிலேயே தயாரிப்பதால் நாம் விரும்பும் பொருட்களைப் பயன்படுத்தி நமக்கு பிடித்த சுவையை உருவாக்கிக் கொள்ளலாம். இதை இன்றே தயாரித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.