
சில நேரம் தோசை மாவு நன்றாக புளித்துவிடும். அப்பொழுது ரவையை வறுத்து அதனுடன் ஜவ்வரிசியையும் சேர்த்து மிக்ஸியில் பொடித்து அதை புளித்த மாவுடன் சேர்த்து வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம் வதக்கி போட்டு தோசை ஊற்றலாம். சிறிது கூட புளிப்பே தெரியாது வித்தியாசமாகவும் இருக்கும்.
ஒரு கப் சிவப்பு கெட்டி அவல், ரெண்டு கப் பச்சரிசி, சிறிது உளுத்தம் பருப்பு ஆகியவற்றை ஊறவைத்து அரைத்து தோசை ஊற்றினால் சுவையாக இருக்கும்.
நல்ல சிவந்த மட்டை அரிசி இரண்டு கப், ஒரு கப் பச்சரிசி, ஒரு கப் புழுங்கல் அரிசி குருணைகள், கைப்பிடி உளுந்து, வெந்தயம் ஊற வைத்து தோசை ஊற்றினால் மெத்தன்று வரும். சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி தாங்கும். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி இருக்காது. நிதானமாக ஜீரணமாவதை நன்கு அறியலாம். சிறிது கூட சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்பாக வேலை செய்யலாம்.
வறுத்த ரவையை மாவாக திரித்து அதை வெல்லப்பாகில் இட்டு தேங்காய் பூ போட்டு பிசைந்து பிடித்து வைத்தால் வித்தியாசமான ருசியில் கொழுக்கட்டை தயாராகிவிடும்.
சாம்பார், ரசம் போன்றவைகளுக்கு பயன்படுத்தும் புளியைக் கரைக்க தண்ணீருக்கு பதிலாக சாதம் வடித்த கஞ்சி அல்லது அரிசி களைந்த தண்ணீரை பயன்படுத்தலாம். சத்துக்கு சத்து ருசிக்கு ருசி கிடைக்கும்.
உளுந்து போண்டா செய்யும்போது வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை சேர்த்து அரைத்து இதர சாமான்கள் சேர்த்து போண்டா செய்யலாம். வித்தியாசமான ருசியில் அசத்தலாக இருக்கும். சர்க்கரை வள்ளி கிழங்கை வேகவைத்து சாப்பிட்டால் விக்கும். இதுபோல் சாப்பிட்டால் மெத்தென்றும் மிருதுவாகவும் இருக்கும்.
காலையில் செய்த உருளைக்கிழங்கு வாழைக்காய் பொடிமாஸ் மீந்து இருந்தால் மாலையில் கடலைமாவில் தோய்த்து போண்டா செய்யலாம்.
போகா செய்யும் பொழுது கைப்பிடி முருங்கை பூவையும் பொடியாக அரிந்த கேரட், பீன்ஸையும் வெங்காயத்துடன் சேர்த்து வதக்கி உப்பு சேர்த்து ஊறவைத்த சிவப்பு அவலை சேர்த்து லெமன் ஜூஸ் கலந்து கிளறி இறக்க வித்தியாசமான சுவையில் போகா ரெடி.
வெங்காய பக்கோடா போர் அடித்துவிட்டதா? வெண்டைக்காய், கோவக்காயை நீளமாக வெட்டி அத்துடன் சிறிது கடலை மாவு மற்றும் மிளகாய் தூள், உப்பு கலந்து செய்தால் கோவை, வெண்டைக்காய் பக்கோடா ரெடி.
சில நேரங்களில் சில கேரட்டுகள் முற்றலாக இருக்கும். அவற்றை துருவி அத்துடன் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு ,கடலை பருப்பு வெள்ளை உளுத்தம் பருப்பு இவற்றை வறுத்து கேரட் உப்பு , புளி, மிளகாய், ஆகியவற்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசை, பூரிக்கும் தொட்டுக்கொள்ளலாம்.
சின்ன சின்ன கட்டுகளாக விரல் நீளத்திற்கு வாங்கும் வெந்தயக்கீரைகளை உடனே சமைத்து விடவேண்டும். இல்லை என்றால் கெட்டுப்போய்விடும். அவற்றை நன்றாக சுத்தம் செய்து எண்ணெய் ஊற்றி லேசாக வதைக்கி ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால் தேவையானபோது சப்பாத்தி மாவில் சேர்த்து பிசைந்து மேத்தி சப்பாத்தியாக செய்து வீணாக்காமல் சாப்பிடலாம்.
சில நேரங்களில் காபி பொடியை அதிகமாக வாங்கி வைத்து விடுவோம். அது கெட்டுப்போகாமல் இருக்க அதில் பாதியை எடுத்து ஃப்ரீசரில் வைத்து விடலாம். அதோடு காபியை ரசித்து பருக காபிக்கு பயன்படுத்தும் தண்ணீரை அதிகம் கொதிக்க விடக்கூடாது.
அதிகம் கொதித்தால் காபியின் சுவை குன்றிவிடும். காபி தயாரிக்க பயன்படுத்தும் பாத்திரங்கள் கரண்டிகளில் காபி கறை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
காபி பொடியை வாங்கி ஸ்டாக் செய்யக்கூடாது. அதிக நாட்கள் இருந்தால் சுவை குன்றும். காப்பி பொடி பாக்கெட்டை எதனுடனும் சேர்க்காமல் வாயு புகாத பாத்திரத்தில் அடைத்து வைத்தால், அதன் வாசனை மற்றவற்றில் கலவாமல் இருக்கும். இந்த முறையில் காபி கலந்து குடித்தால் மிகவும் ருசிக்கும்.