
தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு சென்றால் அப்போதெல்லாம் ஒரு குச்சியில் செருகிய முறுக்கு விற்பார்கள். அதை வாங்கி சாப்பிடுவ தென்றதால் அலாதி பிரியம் அனைவருக்கும். அதுபோல் ரிங் முறுக்கையும், சுவையில் அசத்தலான திணை அல்வா (Thinai halwa - ring kurukku recipes) செய்முறையையும் பதிவில் காண்போம்.
திணை அல்வா
செய்ய தேவையான பொருட்கள்:
திணை அரிசி -ஒரு டம்ளர்
கருப்பட்டித்தூள் -முக்கால் டம்ளர்
முந்திரி ,திராட்சை, பாதாம் ,பிஸ்தா தலா- ஒரு கைப்பிடி
நெய்- 100 கிராம்
ஏலத்தூள் -கால் டீஸ்பூன்
சுக்கு பொடி- அரை டீஸ்பூன்
தண்ணீர்- ஒரு டம்ளர்
செய்முறை:
முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து வைக்கவும். பாதாமை ஊறவைத்து தோல் எடுத்து மெல்லிய சீவலாக சீவி வைக்கவும் . பிஸ்தாவை லேசாக உடைத்து வைக்கவும். இவை அனைத்தையும் நெய் தடவிய ஒரு ட்ரேயில் பரப்பி வைத்துவிடவும்.
திணையை சுத்தம் செய்து நன்றாக ஊறவைத்து அரைத்து அந்தப் பாலை 30 நிமிடம் தெளிய வைக்கவும். நன்றாக தெளிந்ததும் மேலாக இருக்கும் தண்ணீரை வடித்துவிடவும்.
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் விட்டு கருப்பட்டித் தூளை இளம் பாகு வைத்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு வானலியில் தண்ணீர் ஊற்றி திணை மாவு மற்றும் கருப்பட்டி பாகு சேர்த்து நெய் ஊற்றி நன்றாகக் கிளறவும். அல்வா பதம் வந்தவுடன் நெய் தடவிய ட்ரேயில் கொட்டி நன்றாக சமமாக்கி ஆற விட்டு துண்டுகள் போடவும். திணை அல்வா ரெடி.
ரிங் முறுக்கு
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு -ஒரு டம்ளர்
மைதா -3 டம்ளர்
தண்ணீர்- தேவையான அளவு
சீரகம்- ஒரு டீஸ்பூன்
பெருங்காய பவுடர் -ஒரு டீஸ்பூன்
மிளகு -ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகாய் பொடி -ஒரு டேபிள் ஸ்பூன்
எள்ளு -ஒரு டீஸ்பூன்
உப்பு, எண்ணெய்- தேவைக்கேற்ப
செய்முறை:
மைதா, அரிசி மாவை கலந்துவைத்து, தேவையான அளவு தண்ணீரில் சீரகம், மிளகு, மிளகாய் பொடி, உப்பு, 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்றாக கொதிக்கவைக்கவும். மாவு கலவையை கொதிக்கும் தண்ணீரில் சிறிது சிறிதாக கொட்டி கட்டியாகாமல் கிளறவேண்டும். பின்பு ஒரு தாம்பாளத்தில் கொட்டி நன்றாக பிசைத்து நீளவாக்கில் மாவை உருட்டி மோதிர சைஸில் சுற்றவேண்டும். பின்னர் கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்க ரிங் முறுக்கு தயார். நல்ல காரசாரமாக இருக்கும் இந்த முறுக்கு.