
ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள காய்கறிகளில் சமைக்கும் தன்மையைப் பொறுத்துதான் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். சில காய்கறிகளை இப்படித்தான் சமைக்க வேண்டும் என்ற முறை இருக்கிறது. அப்படி சமைக்காவிட்டால் அந்த காய்கறியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் நம் உடலுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும். அந்த வகையில் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக கிடைக்க நறுக்கியவுடன் சமைக்க கூடாத 4 காய்கறிகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
வெண்டைக்காய்
வெண்டைக்காய் ஒட்டும் தன்மையை கொண்டு இருப்பதால் அதை நறுக்கியவுடன் சமைப்பதால் மேலும் ஒட்டும் தன்மை அதிகமாகி அதனுடைய சுவையை கெடுத்துவிடும். ஆகவே வெண்டைக்காயை சமைப்பதற்கு முன்பாக நன்றாக கழுவி காயவைத்த பிறகு நறுக்கி சிறிது நேரம் அப்படியே வைத்துவிட்டு மிதமான தீயில் எண்ணெய் ஊற்றாமல் வதக்க வேண்டும். இப்படி செய்வதால் வெண்டைக்காயில் உள்ள ஒட்டும் தன்மை நீங்கி சுவை மாறாமல் சத்துக்கள் அப்படியே கிடைக்கும்.
காலிஃப்ளவர்
காலிஃப்ளவருக்குள் இயற்கையாகவே பூச்சிகளும் புழுக்களும் இருக்கும் என்பதால் அதை சமைப்பதற்கு முன்பாக சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி சூடான தண்ணீரில் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைக்கவேண்டும். இப்படி செய்வதால் காலிஃப்ளவருக்குள் இருக்கும் புழுக்கள் மற்றும் பூச்சிகள் வெளியே வந்துவிடும். ஆகவே காலிஃப்ளவரை கொதிக்கவைத்து சிறிது நேரம் கழித்து சமைப்பது தான் உடல் நலத்திற்கும் ஊட்டச்சத்திற்கும் சிறந்தது.
முட்டைக்கோஸ்
முட்டைக்கோஸிலும் காலிஃப்ளவரை போல புழுக்கள் இருக்கும் என்பதால் இதை சமைப்பதற்கு முன்பாக முட்டை கோஸை நன்றாக வெட்டி அதனுடன் உப்பு மற்றும் வினிகர் கலந்த தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். இப்படி ஊறவைப்பதால் சிறிது நேரத்தில் புழுக்கள் இருந்தால் வெளியே வந்து சமைப்பது எளிதாகிவிடும். ஆகவே முட்டைக்கோஸை நறுக்கியவுடன் சமைக்காமல் சிறிது நேரம் கழித்து சமைப்பதே சிறந்தது.
கத்தரிக்காய்
கத்தரிக்காயில் புழுக்கள் பூச்சிகள் இருப்பதோடு அதை நறுக்கிய சிறிது நேரத்திலேயே கருப்பாக மாறிவிடும் தன்மை கொண்டது. ஆகவே கத்திரிக்காயை நறுக்கியவுடன் உடனே சமைத்தால் கசப்பாக இருப்பதோடு ஊட்டச்சத்துக்களும் குறைந்துவிடும். எனவே நறுக்கிய கத்தரிக்காயை சிறிது நேரம் உப்பு தண்ணீரில் வைத்து பின்பு சமைத்தால் கத்தரிக்காயின் சுவையும் ஊட்டச்சத்தும் குறையாமல் ஆரோக்கியத்தை வழங்கும்.
மேற்கூறிய 4 காய்கறிகளையும் இனிமேல் சமைப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பே நறுக்கி வைத்து சமைத்துப்பாருங்கள்.