
குப்பையில் தூக்கி எறியும் காய்கறி தோல்களை வீணாக்காமல், அவற்றை வைத்து நான்கு வகை ரெசிபிகள் செய்து அசத்தலாமே...
பீட்ரூட் தோல் கூட்டு
தேவை:
பீட்ரூட் தோல் - 2 கப்
பாசிப்பருப்பு - அரை கப்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
மிளகு சீரகம் - தலா 2 ஸ்பூன்
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸபூன்
வரமிளகாய் - 2
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
உப்பு , எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
பீட்ரூட் தோல்களை சிறு துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, உளுந்தம் பருப்பு, மிளகு, சீரகம், வரமிளகாய், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை வதக்கி அரைக்கவும். பாசிப்பருப்பையும், பீட்ரூட் தோலையும் வேகவைத்து, அதனுடன் அரைத்த விழுது, உப்பு சேர்க்கவும். சீரகம் தாளித்து அதனுடன் சேர்க்கவும். பூரி, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள ஏற்ற சைட் டிஷ் இது.
வாழைக்காய் தோல் வதக்கல்
தேவை:
வாழைக்காய் தோல் நறுக்கியது - 1 கப்
கடுகு, உளுந்தம் பருப்பு, வர மிளகாய் - தாளிக்க
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்தம் பருப்பு, வர மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து வாழைக்காய் தோல்களை வதக்கி, சிறிது நீர் தெளித்து, உப்பு சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் இறக்கி எடுத்தால், சாப்பாடு, டிஃபன் இவற்றிற்கு தொட்டுக்கொள்ள ஏற்ற வாழைக்காய் தோல் வதக்கல் தயார்.
எலுமிச்சை தோல் திடீர் ஊறுகாய்
தேவை:
எலுமிச்சை தோல் - 12 மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - அரை ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
எலுமிச்சை தோல்களை சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு தூவி, இட்லி தட்டில் வைத்து ஆவியில் சிறிது நேரம் வேக விட்டு எடுக்கவும். சிறு வாணலியில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் தாளித்து, வெந்த எலுமிச்சை தோல்களை சேர்த்துக் கிளறி, இறக்கி வைக்கவும். சட்டென செய்யக்கூடிய, சுவையான ஊறுகாய் இது.
பரங்கிக்காய் தோல் துவையல்
தேவை;
நறுக்கிய பரங்கிக்காய் தோல் - 1 கப்
உளுந்தம் பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
வர மிளகாய் - 2
கடுகு, பெருங்காயத்தூள் - தாளிக்க
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
சிறு வாணலியில் எண்ணெய் விட்டு, உளுந்தம் பருப்பு, வர மிளகாய், புளி இவற்றை வறுத்து, பரங்கிக்காய் தோல் துண்டுகளை போட்டு வதக்கி, எல்லாவற்றையும் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கரண்டியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து இந்தத் துவையலில் சேர்க்கவும். சுவையான, சத்தான பரங்கிக்காய் தோல் துவையல் தயார்.