

இட்லி / தோசை மாவு அரைக்கும்போது சிறிது அவல் சேர்த்து அரைத்தால் தோசை மிருதுவாக இருக்கும்.
இட்லிக்கு ஊறவைக்கும் உளுந்து பருப்பை ஊறவைத்து, அதை இரண்டு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து அரைத்தால் அதிகமாக மாவு கிடைக்கும்.
கிரைண்டரில் அரிசியை போடும் முன்பு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி விட்டு பிறகு அரிசியை போட்டு அரைத்தால் எளிதாக அரைபடும்.
இட்லி மாவு அரைக்கும்போது ஊறவைத்த வெந்தயத்தை முதலில் கிரைண்டரில் போட்டு நன்கு அரைத்த பிறகு, உளுந்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, தண்ணீர் விடாமல் அரைக்கவும். அதன் பின் குளிர்ந்த நீர் அல்லது ஐஸ் கட்டிகளை போட்டு அரைத்தால் உளுந்து மாவு பந்து போல வரும்.
இட்லி மாவு அரைக்கும்போது கிரைண்டரில் முதலில் உளுந்து மாவு அரைத்தால் மாவு நீர்த்துவிடும். அதற்கு பதிலாக முதலில் அரிசியை போட்டு அரைத்து, பிறகு உளுந்து மாவு அரைத்தால் நீர்த்து போகாது. பின்னர் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். கிரைண்டர் சுத்தம் செய்யும் வேலையும் எளிதாக இருக்கும்.
இட்லி மாவில் தேவையான அளவு எடுத்து அதில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து நன்கு கலந்து கொண்டு பிறகு இட்லி ஊற்றி வைத்தால், இட்லி சுவையாகவும் நல்ல மணமாகவும் இருக்கும்; இட்லி தட்டில் ஒட்டாமல் வரும்.
சிலர் இட்லி மாவுடன் உப்பு சேர்க்காமல் ஃப்ரிட்ஜில் வைத்து தேவையானபோது எடுத்து உப்பு சேர்த்து உபயோகிப்பர். இதனால் மாவு வெளியே எடுத்து வைத்தவுடன் நுரைத்துவிடும்; மேலும் ஃப்ரிட்ஜில் ஒரு வித வாடை வீசும்.
அதற்கு பதிலாக அரைத்ததுடன் உப்பு சேர்த்து நன்கு புளிக்க வைத்து, பாத்திரங்களில் கெட்டியாக (தண்ணீர் சேர்க்காமல்) ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து தேவையான அளவு எடுத்து உபயோகிக்கலாம்.
தோசை மாவு அரைக்கும் போது அவசரத்தில் உளுந்து தீர்ந்து விட்டால், ஒரு டம்ளர் துவரம் பருப்பை ஊறவைத்து அரைத்து கொள்ளலாம்.
ஆப்பத்திற்கு அரைக்கும்போது தேங்காய் துருவல் சேர்ப்பதற்கு பதிலாக ஒரு கப் வெள்ளை பூசணியை சேர்த்து அரைத்து ஆப்பம் வார்த்தால் மிகவும் சுவையாகவும் மென்மையாகவும் இருக்கும்.
அடை தோசைக்கு அரைக்கும்போது ஒரு உருளைக்கிழங்கை தோல் உரித்து அதோடு சேர்த்து அரைத்தால் அடை தோசை சுவையாகவும் முறுகலாகவும் இருக்கும்.