தீபாவளிக்கு பலவிதமான பலகாரங்கள் செய்வீர்கள். ஆனால் மிக சுவையான எல்லோருக்கும் பிடித்த தேங்காய் திரட்டுப்பால் மற்றும் பொட்டுக்கடலை முறுக்கு, நீங்கள் செய்தது உண்டா? இந்த ஆண்டு செய்து பாருங்களேன் உங்களுக்கு வீட்டில் நிச்சயம் சபாஷ் கிடைக்கும்.
பொதுவாக பாலில் ஸ்வீட் செய்தால் குழந்தைகளுக்கு பிடிக்கும். அதிலும் தித்திப்பான திரட்டுப்பால் செய்தால், சொல்லவா வேண்டும். இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். திரட்டுப்பால் செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
பால் – ஒரு லிட்டர்
ஏலக்காய்த் தூள் – ஒரு ஸ்பூன்
நெய் – அரை ஸ்பூன்
முந்திரிபருப்பு – 10
செய்முறை:
ஒரு பெரிய அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்றி, கொதிக்க விடவும். பின்னர் அடுப்பை மிதமான தீயில் எரியவிடவும். அதனை அடிக்கடி கிளறி விட்டுக்கொண்டே இருக்க வேண்டும். சிறிது நேரத்தில் பால் திக்காக நிறைய ஏடு சேர்ந்து வரும்.
பால் நிறைய ஏடுடன் திக்காக வரும்போது, சர்க்கரை அல்லது வெல்லம் போட்டு நன்றாக கலக்கவும். சிம்மில் வைத்து நன்றாக கிளற வேண்டும்.
இப்போது திரட்டுப்பால் ஒன்றாக சேர்ந்து வரும். அடுத்து நெய், ஏலக்காய்தூள் சேர்த்து கிளறி ஒரு கிண்ணத்தில் நெய் தடவி அதில் கொட்டி பரிமாறவும். இப்போது தித்திப்பான திரட்டுப்பால் ரெடி.
பொட்டுக்கடலை முறுக்கு:
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – 4 கப்
பொட்டுகடலைமாவு – 1 1/2கப்
மிளகாய்தூள் – 1 மேசைக்கரண்டி
சீரகம் – 1 /2 தேக்கரண்டி
வெள்ளை எள் – 1 / 2 தேக்கரண்டி
வெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
எண்ணெய் – பொரிப்பதற்கு
செய்முறை:
பொட்டுக்கடலையை மாவாக அரைத்துக் கொள்ளவும். வெண்ணையை உருக்கி கொள்ளவும். அரிசி மாவு, பொட்டுகடலை மாவு, மிளகாய்தூள், சீரகம், வெள்ளை எள், வெண்ணெய் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து சிறிது தண்ணீர் கலந்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் காயவைக்கவும்.
பிசைந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்து இரண்டு பக்கமும் பொரித்து எடுக்கவும்.