
முன்பு காலம்தொட்டே நம் சமையலில் புளிப்பு சுவையுடைய உணவுகள் 50./. காரம், உவர்ப்பு, இனிப்பு, கசப்பு என எல்லா சுவையும் கலந்து சாப்பிட்டு சுவைத்து வந்தோம். நம்மை அறியாமலேயே இந்த சுவைகள் எல்லாம் நம் நாக்கிற்கு சுவை தருவதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் துணை புரிந்தது. அதிலும் கீரைகள் அனைத்தும் உடல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக உள்ளது.
எளிமையாக கிடைக்கக் கூடிய கீரையில் பலவகைகள் உள்ளன. அதில் ஒன்றாக புளிச்சக்கீரை எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதில் வைட்டமின்களும், தாதுக்களும், சுண்ணாம்பு சத்து,பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் என அனைத்து விதமான சத்துக்களும் உள்ளன.
ஆன்டி ஆக்ஸிடண்டு என்று சொல்லக் கூடிய Flavonoids, Anthocyanin, poly phenolic acid இருப்பதால் பல நோய்களைத் தடுக்கவும், குணப்படுத்தவும் உதவுகிறது.
இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் ஜீரண சக்தியை அதிகரித்து மலச்சிக்கல், வயிற்று போக்கு, வயிறு உபாதைகள் வராமல் தடுக்க உதவுகிறது. இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் ரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள் உற்பத்தியை அதிகரித்து ரத்தச்சோகையால் ஏற்படும் அசதி, படபடப்பு, உடல் சோர்வு, மூச்சு வாங்குதல் போன்ற பிரச்னைகளை சரிசெய்ய உதவுகிறது.
கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவுகிறது. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ளதால் கலோரியும் குறைவாக உள்ளது. அதிக நேரம் பசியில்லாமல் இருக்கும். உடல் எடையும் குறையும். தோலில் சுருக்கம் ஏற்படாமல் பாதுகாக்கும்.
அரிப்பு, சுருக்கம் போன்ற தோல் நோய்களைப் போக்கும். இதிலுள்ள வைட்டமின் மற்றும் தாது உப்புக்கள் கூந்தலின் பொலிவை அதிகரித்து முடி உதிர்வை தடுக்கிறது. இதில் உள்ள வைட்டமின் சி பல் ஈறுகளில் ரத்தம் கசிவதை தடுக்கிறது. எலும்பை வலுவாக்க உதவுகிறது.
வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வாரம் ஒருமுறை என சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.