
உருளைக்கிழங்கை வேகவைத்து, இதனுடன் தேன்குழல் மாவு, உப்பு, காரத்தூள் சேர்த்துப் பிசைந்து முறுக்கு அச்சில் பிழியுங்கள். வாயில் போட்டதும் கரைந்துவிடும் முறுக்கு நொடியில் தயார்.
வெந்தயப் பொடியை ஊறுகாய் வகைகளில் போட்டு வைத்தால் ஊறுகாய் சீக்கிரம் கெட்டுப்போகாமல் இருக்கும்.
தோசைக்குத் தொட்டுக்கொள்ள வைத்திருக்கும் சட்னி, துவையல் வகைகளையும், தோசை மாவில் கலந்து வார்த்தால் தோசை சுவை பிரமாதமாக இருக்கும்.
கிரேவி, கூட்டு, குருமா போன்றவை செய்யும்போது சில சமயங்களில் கெட்டியாகிவிடும். இதைத் தவிர்க்க தக்காளியை கூடுதலாக அரைத்துச் சேர்த்தால் அவை தளர்ச்சியாக இருப்பதுடன், அதிக எண்ணையும் சேர்க்க தேவை வராது.
எப்போதும் வீட்டில் பால் பவுடர் இருந்தால் அவசரத் தேவைக்கு கைகொடுக்கும். தண்ணீரில் கரைத்து காபி, டீ போடலாம் பவுடரைக் கரைத்து கொதிக்கவைத்து தயிராக தோய்க்கலாம். பாயசம், மில்க் ஷேக், ஐஸ்கிரீம் சுலபமாக தயாரிக்கலாம்.
பெரிய பாத்திரத்தில் தயிர் தோய்த்தால் சீக்கிரம் தோயாது. அதற்கு பதில் சிறுகிண்ணங்களில் தோய்த்தால் சீக்கிரம் உறைவதுடன் எடுத்துப் பரிமாறவும் எளிதாக இருக்கும்.
மாவு அரைத்ததுமே தோசை வார்த்தால் சப்பென்று இருக்கும். கொஞ்சம் புளிப்பான ரசத்தை விட்டு தோசை வார்த்தால் அதன் ருசியே அலாதிதான்.
நறுக்கிய வெங்காயத்தை கடாயில் வதக்கும் போது, ஒரு நிமிடம் வெங்காயத்தை மட்டும் புரட்டிவிட்டு, தண்ணீர்ப் பசை போனதும் எண்ணெய் ஊற்றி வதக்கினால், குறைவான எண்ணையே தேவைப் படும் என்று மட்டுமல்லாமல் சீக்கிரம் வதங்கியும்விடும்.
குழம்பு, ரசம் போன்றவற்றுக்கு புளி ஊறவைக்கும்போதே கல் உப்பையும் சேர்த்துப் போட்டு விடுங்கள். சுவை கூடுவதுடன், புளியை வடி கட்டும்போதே உப்பில் உள்ள அழுக்கும் சேர்ந்தே நீங்கிவிடும்.
நூறு கிராம் வெந்தயத்தை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து மிக்ஸியில் பொடித்து பாட்டிலில் வைத்துக் கொள்ளுங்கள். குழம்பு, சாம்பார் இவற்றை அடுப்பிலிருந்து இறக்கும் முன், ஒரு ஸ்பூன் சேர்த்தால் சாம்பார், குழம்பு மணம் ஊரைத்தூக்கும்.
ரவா உருண்டை, பயத்தம் உருண்டை, கடலை மாவு உருண்டை போன்ற இனிப்புப் பலகாரங்கள் செய்யும்போது, சர்க்கரையின் அளவைக் குறைத்து, பால் பவுடர், பாதாம் மிக்ஸ் போன்றவற்றைச் சேர்த்துச் செய்தால் சுவையோடு சத்தும் கிடைக்கும்.
இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்களை சுவிட்ச் போர்டு, மெழுவர்த்தி மற்றும் தீப்பெட்டி, கேஸ்லைட்டர் வைக்கும் இடம், டார்ச்லைட் உள்ள அலமாரி என்று ஒட்டி வைத்தால் திடீரென கரண்ட் கட் ஆகும் சமயங்களில் கை கொடுக்கும்.