சர்க்கரை வள்ளிக்கிழங்கு இலை அடை
தேவையான பொருட்கள்:
பச்சரிசி _ 2 கப்
சர்க்கரை வள்ளிக்கிழங்கு _1/2 கிலோ
பனைவெல்லம் பொடித்தது_2 கப்
இளநீர் _1/2 கப்
சுக்குப்பொடி _1/4 ஸ்பூன்
ஏலக்காய்பொடி _1/4 ஸ்பூன்
தேங்காய்த்துருவல்_1 கப்
வாழையிலை _1
செய்முறை: பச்சரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து, இளநீர் சேர்த்து மை போல் அரைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் இதை ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பும், ஒரு ஸ்பூன் எண்ணெய்யும் சேர்த்து பளபளவென்று வரம் வரை கிளறி, உருண்டு திரண்டு கொழுக்கட்டைமாவு பக்குவத்தில் வந்தவுடன் தீயை அணைக்கும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கை நன்கு வேகவைத்து மசித்துக் கொள்ளவும். அடி கனமான சட்டியில் வெல்லத்தையும், சிறிது தண்ணீரையும் விட்டு நன்கு கொதித்து வந்தவுடன் அத்துடன் கிழங்கு, தேங்காய்த் துருவல், சுக்குத்தூள் சேர்த்துக் கிளறி சுருள வதக்கி இறக்கவும்
வழையிலையை சதுரங்களாகக் கிழித்து வைக்கவும். அதில் எண்ணெய் தடவி, அரிசி மாவு உருண்டையை வைத்து (எலுமிச்சை அளவு) வட்டமாகச் தண்ணீர் தொட்டு தட்டவும். இதற்குள், ஒரு பாதி பகுதியில், கிழங்கு பூரணத்தை வைத்து அப்படியே இலையுடன் மடிக்கவும். அடையின் ஓரங்களை வெட்டவும்.10 அடை வரை செய்து இட்லி தட்டுகளில் வைத்து ஆவியில் 10 நிமிடங்கள் வரை வேகவைக்கலாம். சர்க்கரைவள்ளி கிழங்கு அடை தயார்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
தேவையான பொருட்கள்:
சர்க்கரைவள்ளிக்கிழங்கு _2
எண்ணெய் _2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் 1/4 ஸ்பூன்
சீரகத்தூள் _ 1/2 ஸ்பூன்
பெருங்காயம் _சிறிதளவு
உப்பு _ தேவைக்கு
கருவேப்பிலை _1 கொத்து
செய்முறை: கிழங்கை நன்கு கழுவி தோலை சீவி மெல்லிய வட்டங்களாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள், உப்பு மற்றும் சிறிதளவு பெருங்காயம் சேர்த்து நறுக்கிய கிழங்கை கலந்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின்னர் மசாலாவில் கலந்து வைத்துள்ள கிழங்கு வில்லைகளை சேர்த்து வதக்கவும். மிதமான தீயில் நன்றாக பொரிய வைத்து பொன்னிறமாக வந்ததும் சிறிது பிரட்டி விட்டு மறுபக்கமும் பொன்னிறமானதும் அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறலாம்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு அல்வா
தேவையான பொருட்கள்:
சர்க்கரை வள்ளிக்கிழங்கு _2
பால் _1 கப்
சர்க்கரை _1/2 கப்
நெய் _3 ஸ்பூன்
ஏலக்காய்பொடி _1/4 ஸ்பூன்
முந்திரி _10(சிறு துண்டுகளாக நறுக்கியது)
திராட்சை _10
கேசரி பவுடர் _1 சிட்டிகை
செய்முறை:
சர்க்கரை வள்ளிக்கிழங்கை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி குக்கரில் நன்கு வேகவைத்து மசித்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும்.
அதே பாத்திரத்தில் மசித்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை சேர்த்து நெய்யில் ஒரு சில நிமிடங்கள் வதக்கவும். பின்னர் பால் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும். பால் வற்றி கிழங்கும் நன்கு கலந்ததும் சர்க்கரையை சேர்த்து கலவை சிறிது இளக்கமாக இருக்கும்போது தொடர்ந்து கிளறி, சர்க்கரை கரைந்ததும் கலவை உறைந்துவிடும். அந்த நேரத்தில் ஏலக்காய்பொடி சேர்த்து நறுமணம் வரும்போது மீதம் உள்ள நெய்யை சேர்த்து ஹல்வா சட்டியில் பிடித்து விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். கலவை இறுகி பாத்திரத்தின் ஓரங்களில் ஒட்டாமல் நெய் பிரிந்து வரும்போது அடுப்பில் இருந்து இறக்கி வைத்து மேலே வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.