
தேன், அதன் சுவை மற்றும் ஆரோக்கிய நலன்களுக்காக காலம் காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், நாம் பயன்படுத்தும் தேன் உண்மையில் சுத்தமானதா, அல்லது கலப்படமா என்பதை அறிவது மிகவும் முக்கியம்.
தேன் முக்கியமாக மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.
கொம்புத் தேன் என்பது திறந்தவெளிப் பகுதிகளில், அதாவது பாறைகள் அல்லது மரங்களில் கூடுகட்டும் தேனீக்களிடம் இருந்து கிடைக்கிறது. இது அதிக அளவில் சேகரிக்கப்படுகிறது.
பொந்துத் தேன். இது குகைகள் அல்லது மரப் பொந்துகள் போன்ற இருண்ட இடங்களில் வாழும் தேனீக்களிடம் இருந்து பெறப்படுகிறது. பெட்டிகளில் வளர்க்கப்படும் தேனீக்கள் பொதுவாக இந்த வகையைச் சேர்ந்தவை.
கொசுத் தேனீ எனப்படும் மிகச் சிறிய தேனீக்கள் மூலம் கிடைக்கும் தேன். இது மிகக் குறைந்த அளவே கிடைக்கும் என்றாலும், மருத்துவ குணங்கள் நிறைந்தது எனப் போற்றப்படுகிறது.
தேனைப் பதப்படுத்தும் முறை அதன் தரத்தை பாதிக்கிறது. தேனில் உள்ள ஈரப்பதத்தை நீக்குவதன் மூலமே நீண்ட காலம் கெடாமல் பாதுகாக்க முடியும். இயற்கையாகவே சூரிய ஒளியில் காயவைப்பதன் மூலம் இதைச் செய்யலாம். ஆனால், இது அதிக நேரம் எடுக்கும் என்பதால், வணிகரீதியாகத் தேனை உற்பத்தி செய்பவர்கள் பெரும்பாலும் சூடுபடுத்திப் பதப்படுத்துகிறார்கள்.
இந்த வெப்பப்படுத்துதல் தேனின் இயல்பான தன்மையையும், சில சமயங்களில் அதன் மருத்துவக் குணங்களையும் மாற்றியமைத்து விடலாம். எனவே, கடைகளில் தேன் வாங்கும்போது இந்த அம்சங்களை கருத்தில் கொள்வது அவசியம்.
சுத்தமான தேனை கண்டறிவது எப்படி?
உங்கள் தேன் சுத்தமானதா என்று சோதிக்க சில எளிய வழிகள் உள்ளன. முதலில், நீர் உறிஞ்சாத ஒரு காகிதத்தை எடுத்து, அதில் இரண்டு துளி தேனை விடவும். தேன் அப்படியே காகிதத்தின் மேல் தங்கினால், அது சுத்தமான தேன். மாறாக, காகிதம் தேனை உறிஞ்சினால், அதில் கலப்படம் இருக்கலாம்.
அடுத்ததாக, ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு தேக்கரண்டி தேனை டம்ளரின் மேலிருந்து மெதுவாக ஊற்றவும். சுத்தமான தேன் தண்ணீருக்குள் ஒரு நூலைப் போல நேராகச் சென்று டம்ளரின் அடிப்பகுதியை அடையும். அது கீழ்நோக்கி செல்லும் வழியிலேயே தண்ணீரில் கரைய ஆரம்பித்தால், அது கலப்படமான தேனாக இருக்கலாம்.
தேன் ஒரு அற்புதமான இயற்கை இனிப்பு மட்டுமல்ல, பல்வேறு நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படும் ஒரு பொக்கிஷம். அதன் தூய்மையை அறிந்து பயன்படுத்துவது, அதன் முழுப் பலன்களையும் பெற உதவும்.