
சமையலை சீக்கிரமாக முடிக்கவேண்டும், சமைத்ததை வீணாக்காமல் இருக்கவேண்டும் என்றால், அன்றாடம் டிப்ஸ்களை பயன்படுத்துவது அவசியம். அப்படி பயன்படுத்த வேண்டிய டிப்ஸ் இதோ:
கோடைக்காலம் வந்துவிட்டால் வத்தல் வடகம் போடுவதில் எல்லோரும் மும்முறமாவோம். அப்பொழுது கொத்தவரை, அவரை வெண்டை, பாகல், மணித்தக்காளி ஆகிய காய்களை கொண்டு வற்றல் போடுவோம். காய்களை துண்டுகளாக நறுக்கி வேகவிட்டு எடுத்து உப்பு கரைத்த கெட்டியான மோரில் தோய்த்து வெயிலில் காய போட்டால் சுவை நன்றாக இருக்கும். நன்றாகவும் காய்ந்து விடும். சீக்கிரம் கெடாமலும் இருக்கும்.
ஜவ்வரிசியை கூழாக செய்து வடாம் ஊற்ற சிரமமாக இருக்கிறது என்றால், ஒரு கிண்ணம் ஜவ்வரிசியை நன்றாக கூழாக காய்ச்சி கொண்டு, அதில் பச்சை மிளகாய் உப்பை விழுதாக அரைத்து சேர்த்து, அவலை நன்றாக கழுவி அதில் போட்டு சூடு ஆறியதும் எலுமிச்சம் பழம் சாறு பிழிந்து நன்றாக கலந்து விட்டு சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி வெயிலில் காயப்போட்டு பாருங்கள். குனிந்து, உட்கார்ந்து கூழாக பிழிய சிரமமாக இருந்தால் நின்றுகொண்டே உருண்டைகளாக உருட்டி வைத்துவிடலாம்.
சில சமயங்களில் விதை இல்லாத பச்சை மிளகாய் மலிவாக இருந்தால் அதிகமாக வாங்கிவிடுவோம். அவற்றை அப்படியே வைத்திருப்பதை விட அதனுடன் புளி, உப்பு போன்றவற்றை தேவையான அளவு சேர்த்து அரைத்து தாராளமாக எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பை தாளித்து இந்த தொக்கை அதில் போட்டு நன்றாக ஈரம் போக வதக்கி வைத்துக்கொள்ளலாம். கோடையில், கூழ், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.
காய்கறி, வெங்காயம், பூண்டு நறுக்கும் பொழுதே கிச்சனில் பயன்படுத்தி விட்டு மீதமாகி இருக்கும் பாக்கு மட்டை தட்டுகள் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். அவற்றில் காய்கறி தோலை சீவி போடுவது, கீரை காம்புகளை போடுவது, கடலை உடைத்து தோலை போடுவது, தேங்காயை அதில் வைத்து துருவுவது போன்றவற்றிற்கு பயன்படுத்தினால் கிச்சன் மேடை அழுக்காகாமல் இருக்கும். வேலை செய்வதும் எளிதாக இருக்கும். சில நேரங்களில் வத்தல், வடகம், தானியங்களை பரப்பி காயவைக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சில நேரங்களில் சிவப்பு அரிசி தோசை மாவு குறைவாக இருந்தால் அதனுடன் ராகி மாவை கலந்து தோசை ஊற்றினால் சுத்தமாக எடுக்க வராது. அதற்கு சிகப்பு அரிசியுடன் பச்சரிசி, புழுங்கல் அரிசி சேர்த்து அரைத்து தோசை வார்த்தால் எளிதாக எடுக்கலாம்.
தோசைக்கு கல்லில் நல்லெண்ணெய் தேய்த்து தோசை ஊற்றினால் எளிதாக எடுக்க வரும். தேங்காய் எண்ணெய் தேய்த்து தோசை ஊற்றினால் எடுக்க வராது. ஆதலால் தோசைக்கு தேங்காய் எண்ணெய் ஊற்றுவதை தவிர்த்து விடுவது நல்லது.
சப்பாத்தி மீந்துவிட்டால் அதை நீள நீளமாக நூடுல்ஸ் போல் கட் செய்து, வெங்காயம் காய்கறிகளை வதக்கி அதனுடன் மசாலா சேர்த்து இதையும் சேர்த்து வதக்கி நூடுல்ஸ் ஆக சாப்பிடலாம்.
சில நேரங்களில் விருந்தினர் வருகையால் அதிகமாக சாதம் வடித்து விடுமோம். அவற்றை வீணாக்காமல் புளியோதரை, லெமன் ரைஸ் போன்று கலந்து வைத்துவிட்டால் அடுத்த நாள் சாப்பிடலாம் .ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடுவதை விட இது நன்றாக இருக்கும்.
தனியா, புதினா, கருவேப்பிலை, வெந்தயக்கீரை போன்றவை மீந்து விட்டால் அப்படியே காயவைத்து வைத்துக்கொண்டால், இவை ஃபிரெஷ் ஆக வீட்டில் இல்லாதபோது சமையலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
எண்ணெயில் அடியில் தங்கியிருக்கும் மண்டியை இரும்பு சாமான்களில் பூசி வைக்கலாம். இதனால் துரு ஏறாமல் இருக்கும்.