
கோடையில் நம் உடல் எதிர்கொள்ளும் நீர் மற்றும் சக்தியின் இழப்பை சமநிலைப்படுத்தி, மீண்டும் நம் உடல் புத்துணர்ச்சியும் பலமும் பெற உதவும் 7 வகையான ரைத்தாக்களின் ரெசிபியை இப்பதிவில் பார்க்கலாம்.
1.வெள்ளரிக்காய் ரைத்தா: கோடையில் உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றத்துடனும் வைக்க உதவும். வெள்ளரிக்காயைத் துருவி குளிரூட்டப்பட்ட கெட்டித் தயிருடன் சேர்க்கவும். அதனுடன் சீரகத் தூள், உப்பு மற்றும் புதினா இலைகளையும் சேர்த்து கலந்து உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறும்.
2.வெங்காயம் மற்றும் தக்காளி ரைத்தா: வெங்காயம் மற்றும் தக்காளிகளை பொடிசா நறுக்கி தயிரில் சேர்க்கவும். அதனுடன் மல்லி இலைகள், பிளாக் சால்ட் சேர்த்துக் கலந்து புலாவ் மற்றும் பராத்தாக்களுக்கு சைட் டிஷ்ஷாக சேர்த்து உண்ணலாம்.
3.புதினா மற்றும் பச்சை மாங்கா ரைத்தா: இது புளிப்பு சுவையுடன், குளிர்ச்சியும் புத்துணர்ச்சியும் தரும் ரைத்தா. புதினா இலைகளை துருவிய மாங்காயுடன் கலந்து தயிரில் போடவும். அதனுடன் சீரகத்தூள், உப்புத்தூள் சேர்க்கவும். உடலுக்குள் எலக்ட்ரோலைட்களின் அளவை அதிகரிக்கச் செய்யும் அருமையான சைட் டிஷ்.
4.பழங்களிலான ரைத்தா: கண்ணைக் கவரும் வண்ணத்தில், இனிப்பு சுவையுடனான இந்தப் பழ ரைத்தா டெஸ்ஸர்ட்டாகவும் உபயோகிக்க ஏற்றது. புளிக்காத கெட்டித்தயிருடன் ஆப்பிள், வாழைப்பழம், மாதுளை, பைனாப்பிள் போன்ற பழங்களின் நறுக்கிய துண்டுகளை சேர்க்கவும். அதனுடன் சிறிது சாட் மசாலா அல்லது தேன் சேர்த்து பரிமாறவும்.
5.பூந்தி ரைத்தா: இது ஒரு சிம்பிள் ரைத்தா. பூந்தியை தண்ணீரில் முக்கி எடுத்து மெதுவாகப் பிழிந்து தயிருடன் கலக்கவும். அதனுடன் பிளாக் சால்ட், சீரகத்தூள் மற்றும் கொத்தமல்லி இலைகள் சேர்த்து அரிசி உணவுகளுக்கு சைட் டிஷ்ஷாக உட்கொள்ளலாம்.
6.கேரட் மற்றும் பீட்ரூட் ரைத்தா: ஊட்டச்சத்து நிறைந்த ரைத்தா இது. லேசான இனிப்பு சுவை கொண்டது. கலர் கலரான பீட்ரூட்டையும் கேரட்டையும் துருவி தயிரில் கலக்கவும். பின் உப்பு மற்றும் சீரகத்தூள் சேர்க்க, நார்ச்சத்து நிறைந்த நல்லதொரு ரைத்தா நமக்குக் கிடைக்கும்.
7.லவுக்கி (சுரைக்காய்) ரைத்தா: சுரைக்காயை துருவி
லேசாக வேக வைக்கவும். ஆறியவுடன் நீரைப் பிழிந்துவிட்டு தயிருடன் கலக்கவும். அதனுடன் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. செரிமானம் சிறக்கவும், நச்சுக்களை வெளியேற்றவும் உதவும் லவுக்கி ரைத்தா. உடலுக்கு குளிர்ச்சியும், நீரேற்றமும் அதிக ப்ரோபயோட்டிக் சத்தும் தரக்கூடிய ரைத்தாக்களில் ஒன்றை கோடை காலத்தில் தினமும் உட்கொண்டு ஆரோக்கியம் காப்போம்.