அல்டிமேட் சுவையில் பால் தோசையும், பயறு தோசையும்!

Milk dosa and lentil dosa in the ultimate taste!
Dosai recipes
Published on

பால் தோசை

தேவை:

பச்சரிசி மாவு - 2 கப் 

சர்க்கரை - அரை கப் 

பால் - அரை லிட்டர்

ஏலக்காய் தூள் - 2 ஸ்பூன் 

நெய் - தேவைக்கேற்ப 

செய்முறை:

பச்சரிசி மாவை கொதிக்கும் நீரில் போட்டுக்கிளறி, உப்பு சேர்த்து இறக்கி, தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும். இரண்டு மணிநேரம் மூடிவைக்கவும். பிறகு தோசைக் கல்லை காயவைத்து, சிறிது நெய் தடவி, மாவை சற்று கனமாக ஊற்றி, மூடிவைக்கவும். சில நிமிடங்கள் கழித்து, மூடியை அகற்றி, தோசையை எடுக்கவும். பாலை பாதி அளவாக சுண்டும் வரை காய்ச்சி, சர்க்கரை, ஏலக்காய் தூள் கலந்து, சாப்பிடுவதற்கு சற்று முன்பு தோசைகளை இந்தப் பாலில் தோய்த்து எடுத்து சாப்பிடலாம்

பயறு தோசை 

தேவை: 

பச்சைப் பயறு - 2 கப் 

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 3

சீரகம் - 2 ஸ்பூன்

இஞ்சித் துருவல் - அரை ஸ்பூன் 

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.

செய்முறை: 

பச்சைப் பயறை 6 மணிநேரம் ஊறவைத்து,  ஊறிய பின் நைசாக அரைக்கவும். அதில் நறுக்கிய பச்சை மிளகாய், சீரகம், உப்பு சேர்த்து, இரண்டு மணிநேரம் கழித்து, தோசை மாவு பதத்தில் கரைக்கவும். தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு, மாவை தோசைகளாக வார்க்கவும். இதற்கு அரிசி, உளுந்து தேவையில்லை. இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி வெகு பொருத்தம்.

ஜோரான சமையல் டிப்ஸ் சில… 

தக்காளி சூப் நீர்த்துப் போய்விட்டால், வேகவைத்த உருளைக்கிழங்கு ஒன்றை மசித்து சேர்த்தால், சூப் பதம் ஆகி, சுவையும் கூடும், சத்தும் கிடைக்கும்.

குருமா செய்யும்போது, தேங்காயின் அளவை குறைத்து, பாதாம் பருப்பை சேர்த்து அரைத்தால், சத்து நிறைய கிடைக்கும். மூளை வளர்ச்சிக்கும் நல்லது.

இதையும் படியுங்கள்:
மாங்காய் சட்னி - இப்படி செஞ்சு பாருங்க... திரும்ப திரும்ப செய்வீங்க!
Milk dosa and lentil dosa in the ultimate taste!

கறிவேப்பிலையயை அப்படியே போடாமல், அரைத்து, மோரில் கலந்து, சிறிது உப்பு போட்டால், கோடைக்கேற்ற சுவையான, சத்தான பானம் தயார்.

இட்லி மிளகாய் பொடி செய்யும்போது, வறுத்த தேங்காய் துருவல் அல்லது கொப்பரை துருவல் சேர்த்து அரைத்தால், சுவை கூடும். கர்நாடகாவில் இதற்கு சட்னி பொடி என்று பெயர்.

வெயில் காலத்தில் குளிர்ந்த பாலில் உறை ஊற்றினால்தான் தயிர் கெட்டி ஆக இருக்கும்.

மாங்காய் சீசன் வருவதால், துவையல்களில் புளிக்கு பதிலாக மாங்காய் சேர்க்கலாம்.

கேசரி, அல்வா போன்ற இனிப்புகள் செய்யும்போது, கேரட் சாறு கலந்தால் நல்ல நிறம் கிடைக்கும் உடலுக்கும் நல்லது.

சாம்பார், வற்றல் குழம்பு, புளியோதரைக்கு நல்லெண்ணையிலும், ரசத்திற்கு நெய்யிலும், மோர் குழம்புக்கு தேங்காய் எண்ணெயிலும் தாளித்தால் சுவையம் மணமும் கூடிவிடும்.

கேசரி, பர்பி, பால்கோவா போன்ற இனிப்புகள் செய்யும்போது, நான் ஸ்டிக் தவாவில் கிளறினால், அடிபிடிக்காது. கிளறுவதும் எளிது.

பொறியல்களில் தேங்காய் துருவலுக்கு பதிலாக, கேரட், துருவலை தூவலாம். நிறமும் அழகாக இருக்கும். கூடுதல் சத்தும் கிடைக்கும்.

பஜ்ஜி மாவில் கற்பூரவள்ளி இலைகளை அரைத்து சேர்த்தால், பஜ்ஜி மணக்கும். வயிற்று கோளாறுகளும் வராது.

பிழிந்த தேங்காய்ப்பாலை ஒரு மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்தால், மேலே வெண்ணைபோல் திரண்டு வரும். அதை எடுத்துவிட்டால், கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர்களும் தைரியமாக இந்தத் தேங்காய் பாலை உட்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
புதுவித ருசியில் விதம் விதமா பச்சடி செய்யலாம் வாங்க..!
Milk dosa and lentil dosa in the ultimate taste!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com