
சாம்பாருக்கு போட காய்கறிகள் இல்லாவிட்டால், பருப்புடன் சேர்த்து வேர்க்கடலையையும் வேகவைத்து சாம்பாரில் சேர்த்தால் போதும். சாம்பார் மணக்கும்.
எலுமிச்சைச்சாறு சேர்க்கும் பதார்த்தங்களுக்கு, வற்றல் மிளகைத்தவிர்த்து பச்சை மிளகாய் சேர்த்தால்தான் ருசியாக இருக்கும்.
காப்பர் பாட்டம் பாத்திரங்கள் மங்கிவிட்டால் உப்பையும், வினீகரையும் பாத்திரத்தின் மேல் பூசி துணியால் அழுந்தத் தேய்த்தால், பாலிஷ் போட்ட புதுப்பாத்திரம் போல் ஜொலிக்கும்.
பிளாஸ்டிக் டப்பாவில் வரும் வாசனையைப் போக்க, அதில் கல் உப்பு போட்டு, தண்ணீரை ஊற்றி ஊறவைத்து, கொஞ்ச நேரத்துக்குப் பிறகு கழுவவும். பிளாஸ்டிக் வாசனை அறவே நீங்கிவிடும்.
பூரி கரகரப்பாக இருக்கவேண்டுமென்றால், கோதுமை மாவில் சிறிது சாதம் வடித்த கஞ்சியைச் சேர்த்து மாவு பிசைந்து, பூரிகளாக தயார் செய்யவும்.
சமோசா வித்தியாசமாக இருக்க, உருளைக்கிழங்கு மசாலாவைத் தவிர்த்து ஓமப்பொடி, முளை கட்டிய பயிறு, பட்டாணி, நிலக்கடலை நிறைத்து பொரித்தால் சமோசா சுவையே அலாதிதான்!
பஜ்ஜி செய்யப் போறீங்களா? பஜ்ஜி மாவில் சிறிது தக்காளி சாஸ் சேர்த்துக் கலந்து பஜ்ஜி செய்தால் மிகவும் டேஸ்ட்டியான பஜ்ஜி ரெடி.
தோசை வார்க்கும் போது தோசைமாவில் சிறிதளவு நல்லெண்ணெயை கலந்து ஊற்றினால் தோசை கல்லில் ஒட்டாது. சிறிதளவு நல்லெண்ணெயை ஓரங்களில் ஊற்றினால் மட்டும் போதும்.
அழுக்கடைந்த கத்திரிக்கோல், கத்தி போன்றவற்றை உப்பு காகிதத்தால் ( Sand paper) தேய்த்தால், பளபளப்பாகவும், கூர்மையாகவும் ஆகிவிடும்.
ரவா லட்டு செய்யும்போது, அத்துடன் மிக்ஸியில் ரவை போல் பொடித்த அவலையும் நெய்யில் வறுத்துச் சேர்த்து, கொஞ்சம் பால் பவுடரையும் கலந்தால் ரவா லட்டு சூப்பர் சுவையில் இருக்கும்.
காபி, டீ கொடுக்கும் பீங்கான் கப்புகள் கறை படிந்திருக்கிறதா? ஒரு பெரிய வெங்காயத்தை வெட்டி, அதைக்கொண்டு கப்புகளை நன்கு தேய்த்தால் கறைகள் அகன்றுவிடும். பிறகு எதாவது பாத்திரங்கள் தேய்க்க பயன்படுத்தும் பவுடரை பயன்படுத்தி பீங்கான் கப்புகளை நன்றாகக்கழுவி எடுக்கவும்.
பால் காய்ச்சும் பாத்திரத்தில் முதலில் கொஞ்சம் தண்ணீரை விட்டு, பிறகு பாலை ஊற்றிக் காய்ச்சினால், பாத்திரத்தில் பால் ஒட்டிக்கொண்டு அடிப்பிடிக்காது.