
கோடை காலத்தில் தாகம் தீர்க்கவும், உஷ்ணம் தணிக்கவும், வித விதமான குளு குளு சர்பத்களை வீட்டிலேயே செய்யலாமே.. கடைகளில் வாங்குவதை விட, செலவும் குறையும் சுகாதாரமும் கூட, சுவையும் கூட.
தாமரைப் பூ சர்பத்
தேவை:
வெள்ளைத் தாமரை பூக்கள் - 15
சர்க்கரை - 1 கிலோ
செய்முறை:
தாமரைப் பூக்களின் இதழ்களை நிழலில் உலர்த்தி, தண்ணீர்விட்டு காய்ச்சவும். நீர் பாதியளவாக சுண்டிய பிறகு, சுத்தமான துணியால் வடிகட்டவும். சர்க்கரையை பாகு காய்ச்சி, தாமரைப் பூ நீரை விட்டு கலக்கி மீண்டும் காய்ச்சவும். பின்பு இறக்கி வைத்து, ஆறிய பின், கண்ணாடி பாட்டில்களில் ஊற்றி, ஃபிரிட்ஜில் வைக்கவும். தேவைப்படும்போது சில்லென்ற நீரில் தேவையான அளவு கலக்கி பருகலாம்.
வல்லாரை சர்பத்
தேவை:
வல்லாரைக் கொடி - 300 கிராம்
சர்க்கரை - 1 கிலோ
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 2 லிட்டர் நீர் விட்டுக்காய்ச்சவும். நிழலில் காய வைத்த வல்லாரைக் கொடியை அந்த நீரில் போடவும். நீர் ஒரு லிட்டராக ஆகும்வரை சுண்ட விட்டு வடிகட்டவும். சர்க்கரையை பாகு காய்ச்சி, அதில் வல்லாரைக்கொடி நீரை விட்டு காய்ச்சி, சர்பத் பதமாக வந்ததும், இறக்கி, ஆறவிட்டு, பாட்டில்களில் நிரப்பவும். தேவைப்படும்போது நீர் சேர்த்து பபருகவும்.
குங்குமப்பூ சர்பத்
தேவை:
குங்குமப்பூ - 1 கிராம்
சர்க்கரை - முக்கால் கிலோ
செய்முறை:
குங்குமப்பூவில் சிறிது நீர் விட்டு நைசாக அரைக்கவும். ஒரு கப் நீரில் அதை கரைக்கவும். சர்க்கரையை சிறிது நீர் விட்டு காய்ச்சி பாகுபதம் வரும்போது, அரைத்த குங்குமப்பூவை கலக்கி, இறக்கி வைத்து ஆறியதும் பாட்டில்களில் நிரப்பவும். தேவைப்படும்போது அதனுடன் தேவையான அளவு நீர் சேர்த்து பருகலாம்.
சாத்துக்குடி சர்பத்
தேவை:
சாத்துக்குடி - 6
சர்க்கரை கால் கிலோ
செய்முறை:
சாத்துக்குடி பழங்களை சாறு பிழிந்து விதைகளை நீக்கி, வடிகட்டவும். அதில் மூன்று கப் நீர் விட்டு கலக்கவும். சர்க்கரையை பாகுபதமாகக் காய்ச்சி, சாத்துக்குடி சாறை சேர்க்கவும். சர்பத் பதம் வந்தபின் இறக்கி, ஆறவிட்டு, பாட்டில்களில் நிரப்பி வைத்துக் கொண்டு, தேவைப்படும்போது பயன்படுத்தவும்.
திராட்சை சர்பத்
தேவை:
பன்னீர் திராட்சை அரை கிலோ
சர்க்கரை முக்கால் கிலோ
செய்முறை:
திராட்சை பழங்களை கசக்கி, பிழிந்து, விதை, சக்கையை நீக்கிவிட்டு, சிறிது நீர் விட்டுக் கலக்கி வடிகட்டவும். சர்க்கரையை பாகு பதம் வரும்வரை காய்ச்சவும். அந்த திராட்சை சாறை அதில் சேர்க்கவும். சர்பத் பதம் வந்ததும், இறக்கி, ஆறியதும் பாட்டில்களில் நிரப்பி வைத்துக் கொண்டு, தேவைப்படும்போது பயன்படுத்தலாம். இதே போல் ஆரஞ்சு சர்பத்தும் செய்யலாம்.
மாம்பழ சர்பத்
தேவை:
முக்கால் பதம் கனிந்த மாம்பழங்கள் - 8
சர்க்கரை 2 கப்
செய்முறை:
மாம்பழங்களை தோல் நீக்கி, நீரில் வேகவைத்து, சத்தை வடிகட்டவும். அதில் 2 கப் சர்க்கரையை கால் பங்கு தண்ணீர் சேர்த்து, கம்பி பதத்தில் பாகு காய்ச்சி, மாம்பழ சத்தையும், பாகையும் கலந்து, சர்பத் பதம் வந்ததும் இறக்கி, குளிரவைக்கவும். பாட்டில்களில் நிரப்பி பிரிட்ஜில் வைத்துக்கொண்டால், தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.