
வரகரிசி சாப்பிடுவது உடம்பிற்கு நல்லது. வரகரிசி, சர்க்கரை அளவைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உடல் எடையைக் குறைக்கிறது. மலச்சிக்கலை நீக்குவதோடு, மாதவிடாய் கோளாறு களையும் சரி செய்கிறது. மேலும், கல்லீரல், கண் நரம்பு நோய்களைத்தடுக்க உதவுகிறது. வரகரிசியில்,
மாவுச்சத்து குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது.
இத்தகைய அருமையான குணங்களைக் கொண்ட வரகரசியை உபயோகித்து ஸ்பெஷல் ஐட்டம் பண்ணுகையில், செம டேஸ்ட்டாக இருக்கும். இப்போது ரெஸிபியைப் பார்க்கலாமா...?
தேவை:
வரகரிசி 1 1/2 கப்
நல்ல தக்காளி விழுது (அரைத்தது) 2 கப்
பச்சை பட்டாணி ஃப்ரெஷ் 1/2 கப்
வெங்காயம் 2
இஞ்சி-பூண்டு விழுது 2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி 1/4 டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி 1 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை (ஃப்ரெஷ்) -கொஞ்சம்
உப்பு தேவையானது
தண்ணீர் தேவையானது
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
கிராம்பு 4
லவங்கப் பட்டை 1 சிறு துண்டு
முந்திரிப்பருப்பு 10 (ஒன்றிரண்டாக ஒடித்துக்கொள்ளவும்)
எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்
நெய் 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் வரகரிசையைப் போட்டு நன்றாக அலம்பி, சுமார் அரைமணி நேரம் ஊறவிடவும்.
வெங்காயத்தை தோல் நீக்கி, நீளவாக்கில் நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் மற்றும் நெய்யை கலந்துவிட்டு அடுப்பின் மீது வைத்து, காய்ந்தபின் கடுகு, கிராம்பு, லவங்கப்பட்டை, ஒடித்த முந்திரிப் பருப்புக்கள் ஆகியவைகளைப் போட்டு வதக்கவும்.
இத்துடன் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பின், தக்காளி விழுது, பச்சைப் பட்டாணி, மஞ்சள் மற்றும் மிளகாய்ப்பொடி, கொத்தமல்லி இலை போட்டு நன்றாக எண்ணெய் பிரியும்வரை வதக்கவும்.
பின்னர் தேவையான தண்ணீரை மேற்கூறிய கலவையில் விட்டு கொதி வந்ததும், ஊறவைத்த வரகரிசி, தேவையான உப்பு சேர்த்து குக்கரை மூடிவிடவும்.
நான்கு விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும். சற்று நேரம் சென்றதும், குக்கரைத் திறக்க, கம-கம வாசனையுடன் தக்காளி விழுது மிக்ஸ்ட் வரகரிசி ஸ்பெஷல் ரைஸ் ரெடியாகி இருக்கும்.
இந்த ஸ்பெஷல் ரைஸுடன் சாப்பிட, பொரித்த பப்படம், சிப்ஸ், குக்கும்பர் ரைத்தா போன்றவைகளின் காம்பினேஷன் சூப்பராக இருக்கும்.