

கோடை காலத்தில் நம் உடல் உஷ்ணத்தை தணிக்க நாம் குளிர்ந்த மோர், கரும்பு ஜூஸ், வாட்டர் மெலன் போன்ற பல வகையான பழ ஜூஸ்களை அருந்துவதை பழக்கமாகக் கொண்டுள்ளோம். இவைகளுக்கு மாற்றாக தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளில் பிரசித்தி பெற்ற, சுவையும் குளிர்ச்சியும் நிறைந்த, ஐந்து வகை ட்ரிங்க்ஸ் பற்றி அறிந்து கொள்வோமா?
தாய் ஐஸ்ட் டீ (Cha Yen) - Thailand: பள பளக்கும் ஆரஞ்சு நிறத்திலான டீ இது. மிக ஸ்ட்ராங்காக தயாரிக்கப்பட்ட பிளாக் டீயுடன் சர்க்கரை, சுண்டிய பால் (Condensed Milk) மற்றும் ஆவியாக்கப்பட்ட பால் (Evaporated Milk) சேர்த்து இதைத் தயாரிக்கின்றனர். இப்படி தயாரித்ததை ஐஸ் கட்டிகள் மீது மெதுவாக, ஒரு க்ரீமியான, கொஞ்சம் இனிப்புடன் கூடிய, அரை குறையாக உருகிய பனிச்சேறு பதம் கிடைக்கும் வரை ஊற்றுகின்றனர்.
இந்த துவர்ப்பு மிகுந்த தேநீர் (Tannic tea) பால் பொருட்கள் மற்றும் சர்க்கரையுடன் சேர்ந்து ஒரு 'டெஸ்ஸர்ட்' போன்ற உணர்வை தருகிறது. பேங்க்காக் வெயிலுக்கு, இந்த ரிச்சான டீயிலுள்ள ஐஸ் பிரமாதமான புத்துணர்ச்சியை அளிக்கிறது.
வியட்னாமீஸ் ஐஸ்ட் காபி - Vietnam: ரோபஸ்ட் பீன்களிலிருந்து (robust beans) மெதுவாக, சொட்டு சொட்டாக இறக்கப்பட்ட (slow brewed), மனதுக்கு மகிழ்ச்சியும், உடலுக்கு சக்தியும் தரக்கூடிய ஸ்ட்ராங் காபி இது. இதனுடன் இனிப்பு சுவைக்காக சுண்டிய பால் சேர்த்து, பின் அதை ஐஸ் க்யூப் போட்டுள்ள உயரமான கண்ணாடி டம்ளரில் ஊற்றுகின்றனர். கசப்பான காபி, க்ரீமியான இனிப்பு மற்றும் குளிர்ச்சியான ஐஸ் கட்டிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து சமநிலைப்பட்டு, இந்த காப்பியை காலையில் அல்லது பிற்பகலில், கொளுத்தும் வெயிலில் சக்தி பெறுவதற்காக அருந்தப்படும் ஓர் அருமையான பானமாக மாற்றுகின்றன.
ஈஸ் சென்டோல் (Es Cendol) - Indonesia & Malaysia: ஈஸ் சென்டோல் என்பது ஒரு குளிர்ச்சியான, கலப்பின 'டெஸ்ஸர்ட் ட்ரிங்க்'. ஒரு கண்ணாடி பௌல் அல்லது டம்ளரில் பச்சை நிறத்தில், அரிசி மாவில் தயாரிக்கப்பட்ட ஜெல்லி இழைகளைப் போட்டு அதன் மீது கெட்டி தேங்காய்ப் பால் மற்றும் நாட்டு சர்க்கரை சிரப்பை (Palm Sugar Syrup) ஊற்றுவர். பின் அதில் ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து ரிச்சான டெக்ச்சர் கொண்ட குளிர் பானமாக அருந்தி மகிழ்வர். விருப்பப்பட்டால் அதனுடன் வேகவைத்த ராஜ்மா (Red beans) அல்லது துரியன் பழத் துண்டுகள் சேர்த்து பிற்பகல் ஸ்னாக்ஸ்ஸாகவும் உட்கொள்வர்.
லெமன் ஜூஸ் ரம்பா இலை இளநீர் வாட்டர் - Indonesia & Malaysia: இளநீரில் லெமன் ஜூஸ் பிழிந்து அதனுடன் ரம்பா இலை (Pandan leaf) களை கிள்ளிப் போட்டு சிறிது உப்பும் சேர்த்து, வாசனையுடன் புளிப்பு சுவையும் நீரேற்றமும் தரக்கூடிய ஓர் அருமையான பானமாக மாற்றி இளநீரைக் குடிக்கலாம்.
கோக்கனட் ஸ்மூத்தீஸ் - Thailand: மாம்பழம், பைன்னாப்பிள், வாட்டர் மெலன் போன்ற பழங்களை துண்டுகளாக்கி, மிக்ஸியில் அடித்து அதனுடன் இளநீர் அல்லது தேங்காய்ப்பால் சேர்த்துக்கலந்து உயரமான கண்ணாடி டம்ளரில் ஊற்றி ஐஸ் சேர்த்து அருந்துவது உடல் சூட்டை குறைக்க பெரிய அளவில் உதவிபுரியும்.
நீங்களும் இம்மாதிரியான புதுவகை பானங்களை அருந்தி புத்துணர்ச்சி பெறலாமே!