

மிளகு சாதம் ரெசிபி
வெரைட்டி ரைஸ் என்றாலே தயிர் சாதம், தக்காளி சாதம், லெமன் சாதம் இது போல்தான் நாம் சமைத்து வந்துள்ளோம். இன்று அதற்கு மாற்றாக உடலுக்கு பல நன்மைகளைத் தரக்கூடிய மிளகு கொண்டு சுவையான காரசாரமான மிளகு சாதம் செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
அரிசி - 200 கிராம்
மிளகு - 50 கிராம்
சிறுஞ்சீரகம் - 20 கிராம்
கடலைப்பருப்பு - 10 கிராம்
உளுந்தம் பருப்பு -10 கிராம்
கடுகு - 5 கிராம்
முந்திரி -15
பூண்டு- 10
பெருங்காயத்தூள் - தேவையான
அளவு
நெய் - தேவையான அளவு
கருவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை:
அரிசியை நன்கு கழுவி 30 நிமிடங்கள் ஊறவைத்து தேவையான அளவு நீர், உப்பு சேர்த்து வேகவைத்து வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். மிக்ஸி ஜாரில் தேவையான அளவு மிளகு, சிறுஞ்நீரகத்தை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் தேவையான அளவு நெய் ஊற்றி கடுகு சேர்த்து கடுகு நன்கு பொரிந்து வந்தவுடன் கறிவேப்பிலை, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, முந்திரி, பெருங்காயத்தூள், இடித்த பூண்டு சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும். இதனுடன் நாம் அரைத்து வைத்திருந்த மிளகு, சிறுஞ்நீரகத்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவேண்டும். நாம் வடித்து வைத்திருந்த சாதத்தையும் சேர்த்து நன்கு கிளறி இறுதியாக மல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான கமகமக்கும் காரசாரமான மிளகு சாதம் தயார்.
பால் சாதம் ரெசிபி:
பால் சாதம் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவுப் பொருளாகும். சுவையான கமகமக்கும் பால் சாதம் செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 150 கிராம்
பசும்பால் - 2 லிட்டர்
சர்க்கரை - தேவையான அளவு
ஏலக்காய் பொடி - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசியை நன்கு கழுவி 30 நிமிடங்கள் ஊறவைத்து வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில் சுத்தமான பசும்பால் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பசும்பால் நன்கு கொதித்துவரும் பொழுது ஒரு டம்ளர் பாலை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் கொதித்த பாலில் நாம் ஊறவைத்த பச்சரிசியை சேர்த்து மிதமான வெப்பத்தில் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பச்சரிசி அதன் வடிவம் தெரியாத அளவிற்கு மையாகும் வரை வேகவைக்க வேண்டும். பசும்பால் பச்சரிசி நன்கு கெட்டியாக வெந்து வந்தவுடன் தேவையான அளவு சர்க்கரை, ஏலக்காய் பொடி மற்றும் நாம் தனியாக எடுத்து வைத்திருந்த ஒரு டம்ளர் பசும்பால் சேர்த்து நன்கு மிதமான வெப்பத்தில் கிளறி கொடுக்க வேண்டும்.
இறுதியாக தேவையான அளவு நெய் ஊற்று இறக்கவும். சுவையான கமகமக்கும் பசும்பால் சாதம் தயார். இந்த பசும்பால் சாதம் குழந்தைகளுக்கு விருப்பமானது மட்டுமல்லாமல் கோவில்களில் கடவுள்களுக்கும் நெய் வைத்தியமாக படைக்கப்படும் ஒரு அருமையான நாஊரும் சுவையுடைய உணவுப் பொருளாகும்.
பாரம்பரிய சுவை மாறாமல் மிளகு சாதம் மற்றும் பால் சாதம் தயாரிக்கும் முறையைத் தெரிந்துகொள்வதன் மூலம், உங்களது சமையலறை திறமையை மேம்படுத்தி குடும்பத்தினரின் பாராட்டுதல்களைப் பெறலாம்.