பாரம்பரிய மைசூர்பாக் என்பது கரகரவென உள்ளே குழல் ஓடிக்கொண்டு (சிறு சிறு ஓட்டைகள்) பார்க்கவும் நன்றாக இருக்கும். சுவையும் அபாரமாக இருக்கும். இந்த இனிப்புக்கு சர்க்கரை, நெய், கடலைமாவு என மூன்று பொருட்கள்தான் தேவை.
மைசூர் பாக்:
கடலை மாவு ஒரு கப்
நெய் 21/2 கப்
சர்க்கரை 2 கப்
தண்ணீர் 1 கப்
கடலை மாவை சிறிது நெய் விட்டு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். அடி கனமான வாணலி அல்லது உருளியில் சர்க்கரை, தண்ணீர் இரண்டையும் சேர்த்து ஒற்றைக் கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சவும்.
ஒற்றைக் கம்பி பதம் வந்ததும் கடலைமாவை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி தட்டாமல் கிளறவும். மற்றொரு அடுப்பில் நெய்யை சூடாக்கி இளக்கி வைக்கவும். அதனை மைசூர் பாகு கிளறும் போது கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கிளறவும். மாவு, சர்க்கரை இரண்டும் சேர்ந்து நுரைத்து பொங்கி வரும். நன்கு கிளறி வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும் பொழுது நெய் தடவிய தட்டில் கொட்டவும்.
அப்படியே தட்டை ஆட்டாமல் செட்டாக விட வேண்டும். அப்பொழுது தான் பாரம்பரியமான மைசூர் பாகு உள்ளே குழல் ஓடிக்கொண்டு அருமையாக வரும். சிறிது சூடாக இருக்கும் பொழுதே கத்தியால் துண்டுகள் போட்டு விடவும். ஆறியதும் எடுத்து டப்பாவில் பத்திரப்படுத்த மிகவும் ருசியான மைசூர் பாக் தயார்.
ஓமப்பொடி:
பொதுவாகவே காபி, டீயுடன் சேர்த்து சாப்பிடப்படும் மாலை நேர சிற்றுண்டியான ஓமப்பொடி பேல் பூரி, சேவ் பூரி போன்ற எல்லா விதமான சாட் ஐட்டங்களுக்கும் முக்கிய மூலப்பொருளாக உள்ளது. இதனை செய்து வைத்துக்கொண்டால் ஒரு மாதம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.
கடலை மாவு 1 கப்
அரிசி மாவு 1/4 கப்
உப்பு தேவையானது
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
ஓமம் ஒரு ஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன் வெண்ணெய் 1 ஸ்பூன்
எண்ணெய் பொரிக்க
கருவேப்பிலை சிறிது
ஓமத்தை மிக்ஸியில் பொடித்து சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், வெண்ணெய், உப்பு, வடிகட்டி வைத்துள்ள ஓமத்தண்ணீர் எல்லாவற்றையும் சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை ஓமப்பொடி அச்சில் போட்டு பிழியவும். இரண்டு புறமும் வெந்ததும் அதிகம் சிவக்காமல் எடுத்து விடவும். ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலையை எண்ணெயில் போட்டு பொரித் தெடுத்து தட்டில் வைக்கவும். விருப்பப்பட்டால் இரண்டு பூண்டையும் நசுக்கி எண்ணெயில் பொரித்து எடுத்து ஓமப்பொடியுடன் கலந்து வைக்க அனைவரும் விரும்பும் ஓமப்பொடி தயார்.