தினமும் சாப்பிடும் இட்லி,தோசைக்கு மாற்றாக ஒரு நாள் இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பார்க்கலாம் வாங்க!
வெள்ளையப்பம்
தேவையான பொருள்கள்:
பச்சரிசி - 1 கப்
உளுந்து - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரித்தெடுக்க தேவையான அளவு
காய்ச்சிய பசும்பால் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
அரிசி மற்றும் உளுந்தை நன்கு கழுவி 4 மணி நேரம் ஊற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின் அதனுடன் காய்ச்சி ஆற வைத்த பசும்பால் 3 டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து எடுத்துக் கொள்ளவும். பின் இதனோடு தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானவுடன் ஒரு குழிகரண்டியில் மாவை எடுத்து அதனை மெதுவாக எண்ணெயில் விட்டு பொரித்து எடுக்கவும்.
குறிப்பு:
மாவு புளிக்க வேண்டிய அவசியம் இல்லை.
மாவு தோசை மாவை விட சற்று கூடுதலான தண்ணீர் பதத்தில் இருக்க வேண்டும்.
காரச் சட்னி:
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 5
புளி - நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய் - 5
தக்காளி - 1
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி, புளி, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் 4 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு,உளுந்தம் பருப்பு,காய்ந்த மிளகாய்,கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்த கலவையில் சேர்த்து நன்கு கலந்து எடுத்தால் சுவையான காரச் சட்னி தயார்!
குறிப்பு:
பச்சை வாசனை இருப்பதாக உணர்பவர்கள் தாளித்தவுடன் சிறிது நேரம் அடுப்பில் வைத்து வதக்கிக் கொள்ளலாம்.