
பாரம்பரிய இந்திய மதிய உணவுகள் பொதுவாகவே ஆரோக்கியமானவை. சத்து நிறைந்தவை. அவற்றை மேலும் சிறப்பாக்க சில முக்கிய விதிகளை கடைபிடிப்பது நல்லது.
மதிய உணவில் கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசி உணவுகளை குறைத்து காய்கறிகளின் அளவை அதிகரிக்கலாம். இது நம் உணவில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்க உதவும்.
சமையலில் எண்ணெயின் உபயோகத்தை குறைப்பது நல்லது. அதிக எண்ணெய் விட்டு வறுத்த, பொரித்த உணவுகளை தவிர்ப்பதும், ஆவியில் வேகவைத்த உணவுகளை எடுத்துக் கொள்வதும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. சமையலில் காய்கறிகளை வதக்கும்போது குறைந்த அளவு எண்ணெயை உபயோகிக்கலாம்.
காய்கறிகளை அதிகம் எண்ணெய் விட்டு வதக்காமல் குறைவான நீரில் வேகவைத்து தாளித்துக்கொட்ட அதிக எண்ணெய் தேவைப்படாது. காய்கறிகளை வேகவைத்த நீரை கொட்டாமல் சிறிது உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சூப்பாக சாப்பிட சத்தும் சுவையும் கூடும்.
வெளியில் வாங்கும் உணவுகளில் அதிக அளவு எண்ணெய், உப்பு, மசாலாக்கள் சேர்க்கப்பட்டிருக்கும். இது ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல. எனவே வீட்டிலேயே ருசியான சாம்பார், சட்னி வகைகளை செய்து சுவைக்கலாம்.
பருப்பு மற்றும் பயறு வகைகளில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதும், கேழ்வரகு, தினை போன்ற சிறு தானியங்களையும் உணவில் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.
புரோபயோடிக்குகள் நிறைந்த தயிர், மோர் போன்றவற்றை சேர்த்துக் கொள்வது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
வீட்டிலேயே நம் அன்றாட தேவைக்கு ஏற்ப காய்கறிகள் மற்றும் கீரைகளை வளர்ப்பதன் மூலம் ஆரோக்கியமான பூச்சிக்கொல்லி உரங்கள் இடாத சத்தான உணவை எடுத்துக்கொள்ள முடியும்.
மதிய உணவில் அதிக எண்ணெய், மசாலாக்களை குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மஞ்சள், இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம் போன்ற பொருட்களை சேர்ப்பது உணவின் சுவையை அதிகரிப்பதுடன் ஆரோக்கியமாக நோயின்றி வாழவும் உதவும்.
உணவில் அதிகப்படியான உப்பு, சர்க்கரையை குறைப்பதன் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். பொதுவாகவே பாரம்பரிய இந்திய மதிய உணவுகள் ஆரோக்கியமானவை மற்றும் ஊட்டச்சத்து நிறைந்தவை. உணவில் காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகள், கடைசியாக எடுத்துக்கொள்ளப்படும் தயிர் அல்லது மோர் ஆகியவை ஒரு முழு உணவை எடுத்துக் கொண்டதற்கான திருப்தியைத் தரும்.