
நெல்லிக்காய் பொடி
தேவை:
நெல்லிக்காய் - 12
இஞ்சி துருவல் - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
நெல்லிக்காய்களின் கொட்டைகளை நீக்கி வைக்கவும். அதனுடன் உப்பு, பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் கலந்து அரைக்கவும். அதை வடைகளாகத் தட்டி காயவைக்கவும். காய்ந்ததும், உடைத்து மிக்ஸியில் போட்டு பொடிக்கவும். இதனுடன் பெருங்காயத்தூள் சேர்க்கவும். இந்தப் பொடியை சாதத்தில் நெய்விட்டு பிசைந்தும் சாப்பிடலாம். இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ளவும் செய்யலாம்.
நார்த்தை இலை பொடி
தேவை:
நார்த்தங்காய் இலை - 100 கிராம்
உளுந்தம் பருப்பு - 4 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
வர மிளகாய் - 4
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 1 ஸ்பூன்
செய்முறை:
நார்த்த இலைகளைக் கழுவி துணியினால் நன்கு துடைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், உளுந்தம் பருப்பு, வரமிளகாய் இவற்றை வதக்கி நார்த்தங்காய் இலைகளையும் சேர்த்து வதக்கவும். பின்னர் இதனுடன் உப்பு, பெருங்காயத்தூள் கலந்து பொடிக்கவும். இந்தப் பொடியை சாதத்தில் நெய் விட்டு பிசைந்தும் சாப்பிடலாம். தொட்டுக் கொள்ளவும் பயன்படும்.
துவரைப் பொடி
தேவை:
துவரம் பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை கப்
உளுந்தம் பருப்பு - 4 ஸ்பூன்
வர மிளகாய் - 4
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
மூன்று பருப்புகளையும், வரமிளகாயையும் தனித்தனியே வறுத்து, பொடிக்கவும். அதனுடன் பெருங்காயத்தூள், உப்பு சேர்க்கவும். இந்தப் பொடியை சாதத்தில் நெய் விட்டு கலந்து சாப்பிடலாம். வற்றல் குழம்பிலும் சேர்க்கலாம். இட்லி, தோசைக்கு நல்லெண்ணெய் கலந்து, தொட்டுக்கொள்ளவும் செய்யலாம்.
செம்பருத்தி பொடி
தேவை:
சிவப்பு செம்பருத்தி
(ஒருவாரம் நிழலில் காய வைத்தது) – 25 பூக்கள்
கொள்ளு, துவரம் பருப்பு,
கடலைப் பருப்பு தலா 2 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் – 5
புளி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் - 1 ஸ்பூன்
செய்முறை:
வாணலியை அடுப்பில் வைத்து, நிழலில் காய்ந்த பூக்களை வெறும் வாணலியில் வறுத்து எடுத்து வைக்கவும். பிறகு அதே வாணலியில் எண்ணெய்விட்டு, அதில் பருப்பு வகைகள் மற்றும் மிளகாயை வறுக்கவும். இவைகளுடன் உப்பு, புளி சேர்த்து மிக்ஸியில் பொடி செய்யவும். சூடான சாதத்தில் நெய்விட்டு, இந்தப் பொடி சேர்த்துச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இந்தப்பொடி ரத்த சோகை நோய்க்கு மிகவும் நல்ல மருந்து.