ரோட்டுக்கடையில் அல்லது பீச் பக்கத்தில் சுண்டல் மசாலா வாங்கி சாப்பிட்டிருப்பீங்க. செம டேஸ்ட்டாக இருந்திருக்கும். அதை எப்போதாவது வீட்டிலேயே செய்து பார்க்கலாம்ன்னு நினைச்சிருக்கீங்களா? இன்னைக்கு செஞ்சி பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
வெள்ளை சுண்டல்-1 கப்.
வெங்காயம்-1
தக்காளி-1
இஞ்சி பூண்டு பேஸ்ட்-1 தேக்கரண்டி.
மஞ்சள் தூள்-1 தேக்கரண்டி.
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.
கரம் மசாலா-1 தேக்கரண்டி.
எண்ணெய்- தேவையான அளவு.
உப்பு- தேவையான அளவு.
பொடியாக நறுக்கிய கேரட்-1
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி- சிறிதளவு.
செய்முறை விளக்கம்:
ஒரு பவுலில் வெள்ளை சுண்டலை தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது அதை குக்கரிலே மாற்றி தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து 6 விசில் விட்டு எடுத்துக்கொள்ளவும்.
மிக்ஸியில் நறுக்கிய வெங்காயம்1, நறுக்கிய தக்காளி 1, இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அரைத்து வைத்திருக்கும் பேஸ்ட்டை சேர்த்து அத்துடன் 1 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி மிளகாய் தூள், 1 தேக்கரண்டி கரம் மசாலா, உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
இப்போது வேகவைத்து வைத்திருக்கும் சுண்டலை மசாலாவுடன் சேர்த்துக் கிளறி கொத்தமல்லி சிறிது தூவி இறக்கவும். இப்போது அதை சுடச்சுட ஒரு பிளேட்டிற்கு மாற்றிவிட்டு அதன் மீது பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், கேரட்,கொத்தமல்லி தூவி பிரட்டி சாப்பிட்டால் அட்டகாசமா இருக்கும். கண்டிப்பாக வீட்டில் ஒருமுறை செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க.