சத்துமிக்க ’டம்ப்ளிங்ஸ்’ செஞ்சு பார்க்கலாம் வாங்க!
டம்ப்ளிங்ஸ் (Dumplings) செய்வதற்குத் தேவையான 7 வகை ஆரோக்கியம் நிறைந்த பொருள்கள் என்னென்ன தெரியுமா?
நம் முன்னோர்கள் காலத்தில் உணவுகளுக்கு இடையில் சாப்பிட போண்டா, பஜ்ஜி, கடலை உருண்டை, முறுக்கு சீடை போன்ற ஸ்னாக்ஸ்களை செய்து குழந்தைகளுக்குக் கொடுத்து தானும் உண்டு வந்தனர்.
தற்போதைய நாகரீக உலகில் வேற்று நாட்டு உணவுகளாகிய சுஷி (Japan), டம்ப்ளிங்ஸ் (China), மோமோஸ் (Tibet) போன்ற உணவுகளை விரும்பி உண்ண ஆரம்பித்துள்ளோம். இவைகளின் செய்முறைகளைக் கற்று அவற்றை வீட்டிலேயும் செய்து உண்ணுகின்றனர் பலர். டம்ப்ளிங்ஸ் செய்யும்போது உபயோகிக்க வேண்டிய 7 வகை ஆரோக்கியம் நிறைந்த பொருள்கள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1.கோதுமை மாவு: டம்ப்ளிங்கின் வெளிப்பகுதியை கோதுமை மாவினால் செய்வது நன்மை தரும். ஏனெனில் அதில் அதிகளவு நார்ச் சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அடங்கியுள்ளன. இவை சீரான செரிமானத்துக்கும், இரத்த சர்க்கரை அளவை சம நிலையில் வைக்கவும் உதவும்.
2.முட்டை கோஸ்: டம்ப்ளிங்கின் உள்ளே நிரப்ப முட்டைகோஸ் உபயோகிக்கலாம். இது குறைந்த கலோரி கொண்டது. இதில் அதிகளவு நார்ச் சத்து, வைட்டமின்கள் C, K மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இதை டம்ப்ளிங்களில் அதிகம் நிரப்பினால் உட்கொள்ளும் கலோரி அளவு குறைவாகவே இருக்கும்.
3.இஞ்சி: இஞ்சியை சேர்த்து நிரப்புவதால் டம்ப்ளிங்கின் சுவை கூடும். மேலும் செரிமானம் சிறப்பாக நடைபெறும். இதன் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் வீக்கங்களைக் குறைக்க உதவும்.
4.மஷ்ரூம்: காளான்களை டம்ப்ளிங்களில் நிரப்புவதால் சுவை கூடுவதுடன், அவற்றிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட், வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்களும் உடலுக்குக் கிடைக்கும்.
5.பசலைக் கீரை: டம்ப்ளிங்களில் இருந்து மேலும் அதிக ஊட்டச் சத்துக்கள் பெற விரும்புவோர், பசலைக் கீரையை உள்ளே நிரப்புவதற்கு உபயோகிக்கலாம். இந்த கீரையிலிருந்து வைட்டமின் A, C, K, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவற்றைப் பெறலாம்.
6.பூண்டு: பூண்டை டம்ப்ளிங்களின் உள்ளே சேர்ப்பதால் அதன் சுவை மற்றும் மணம் டம்ப்ளிங்களை உண்ண வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும்.
7. கேரட்: கேரட் சேர்ப்பது டம்ப்ளிங்களுக்கு கவர்ச்சியானதோர் நிறம், இனிப்புத்தன்மை மற்றும் ஊட்டச்சத்துக்களை அளிப்பதோடு வாயில் மென்று ரசித்து உண்ண ஏற்றதாகவும் இருக்கும்.
டம்ப்ளிங் செய்யும்போது நீங்களும் மேலே கூறிய 7 வகை உச்சபட்ச சுவையும் ஆரோக்கிய நன்மைகளும் தரக்கூடிய பொருட்களை உபயோகித்து பயனடையலாமே!!