

தொண்டைக்காய்னு சொன்னதும் ஏதோ புதுவகை காய்னு நினைச்சிக்காதீங்க. தொண்டைக்காய் வேறேதுவுமில்லை கோவைக்காய்தான்.
இது கர்நாடகாவில் உள்ள பிரபலமான ரெசிபியாகும். கோவைக்காய் நம்முடைய உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும், இரத்தத்தில் சக்கரையின் அளவை குறைக்கும், சக்கரை வியாதியிலிருந்து பாதுகாக்கும். இதயம் மற்றும் நரம்பிற்கு கோவைக்காய் மிகவும் நல்லதாகும். இது சிறுநீரக கல்லை கரைக்கக் கூடியதாகும். இத்தனை நன்மைகளை கொண்ட தொண்டைக்காயை வைத்து தொண்டைக்காய் அன்னம் எப்படி செய்வதென்று இன்று பார்க்கலாம்.
தொண்டைக்காய் அன்னம் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
தொண்டைக்காய் -2 கப்.
கடுகு-1 தேக்கரண்டி.
உளுந்து- 1 தேக்கரண்டி.
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி.
கருவேப்பிலை- தேவையான அளவு.
காய்ந்த மிளகாய்-4
வேர்க்கடலை- 2 தேக்கரண்டி.
வெங்காயம்-1கப்.
தக்காளி-1/2 கப்.
இடித்த பூண்டு-4
வெல்லம்-1 சிட்டிகை.
புளி தண்ணீர்- சிறிதளவு.
பச்சைமிளகாய்-2
மல்லி தூள்- 1தேக்கரண்டி.
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.
மஞ்சள் தூள்-1 தக்கரண்டி.
உப்பு – தேவையான அளவு.
பெருங்காய பொடி -1/2தேக்கரண்டி.
கொத்தமல்லி- சிறிதளவு.
வடித்து வைத்த சாதம்-2 கப்
எண்ணை- தேவையான அளவு.
தொண்டைக்காய் அன்னம் செய்முறை விளக்கம்:
ஒரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி எண்ணை ஊற்றி அதில் கடுகு 1 தேக்கரண்டி, 1 தேக்கரண்டி உளுந்து, 1 தேக்கரண்டி கடலை பருப்பு, கருவேப்பிலை சிறிதளவு, 4 காய்ந்த மிளகாய், வேர்க்கடலை 2 தேக்கரண்டி இதையெல்லாம் போட்டு அத்துடன் வெங்காயம் 1கப், பச்சை மிளகாய் 2, பூண்டு 4, வெட்டி வைத்திருக்கும் கோவைக்காய் 2கப் , அத்துடன் தக்காளி ½ கப் ஆகியவை சேர்த்து நன்றாக வதக்கவும். மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, தனியா தூள் 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி ஆகியவை சேர்த்து நன்றாக வதக்கவும். கோவைக்காய் வெந்ததும் புளி தண்ணீர் சிறிதளவு விட்டு, வெல்லம் 1 சிட்டிகை சேர்த்து விட்டு கடைசியாக ½ தேக்கரண்டி பெருங்காயப்பொடி சேர்த்து நன்றாக வேக விடவும். தேவைப்பட்டால் தண்ணீர் சிறிது சேர்த்து தொண்டைக்காயை வேகவைக்கவும்.
பிறகு காய் நன்றாக வதங்கி எண்ணை விடும் போது அதில் கடைசியாக ஆற வைத்த சாதத்தை 2 கப் அத்துடன் சேர்த்து கிளறினால் டேஸ்டியான தொண்டைக்காய் சாதம் தயார். கடைசியா கொத்தமல்லி தூவி இறக்கவும். கண்டிப்பாக வீட்டில் செஞ்சி பாருங்க, தொட்டுக்கை கூட எதுவுமே கேக்கமாட்டிங்க.