வனம் வினோதம் - எலிமான்! (Moschila Meminna)

எலிமான்கள்...
எலிமான்கள்...
Published on
gokulam strip
gokulam strip

குளம்புகள் உள்ள விலங்குகளில் உலகத்திலேயே மிகவும் சிறியது எலிமான் (mouse deer). .இதற்கு ஜருகு மான் என்றும் பெயர் உண்டு. தெலுங்கில இதை ஜரிணி பண்டி என்பார்கள். ஜரிணி என்றால் பன்றி என்று அர்த்தம். பார்ப்பதற்கு அப்படி இருப்பதால் அந்தப் பெயர்! இதன் விலங்கியல் பெயர் ட்ராகுலஸ் மிமின்னா (Tragulus meminna). Tragos என்றால்  ‘ஆடு’ என்றும் meminna என்றால் ‘சிறிய’ என்றும் கிரேக்க மொழியில் அர்த்தம். சிங்கள மொழியில் ‘மிமின்னா’  என்றால் ‘எலி போல இருக்கும் மான்’ என்று பொருள். கிட்டத்தட்ட 34 மில்லியன் வருஷத்துக்கு முந்தியிருந்து இவை வாழ்ந்ததற்கான தடயங்கள், படிமங்கள் (fossil) மூலம் கிடைத்திருக்கின்றன.

தென்னிந்தியாவிலும், ஸ்ரீலங்காவிலேயும் அதிகம் காணப்படும் மான் இனம் இது. வெப்ப மண்டலக் காடுகள்தான் இவற்றின் வாழிடம். முதுமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி அருகில் உள்ள இந்திராகாந்தி புலிகள் காப்பகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள ராஜீவ்காந்தி தேசியப் பூங்கா ஆகிய இடங்களில் எலிமான்கள் அதிகம் உண்டு. புற்கள் சூழ்ந்த பாறைக் குன்றுகள், ஆறு மற்றும் ஓடைகளின் கரைகளில் வசிக்கும். மான் என்று பெயர்  இருந்தாலும் தாவரங்களைச் சாப்பிடுவதோடு சின்னச் சின்னப் பிராணிகளையும், மீன்களையும், காட்டில் இறந்து கிடக்கும் மிருகங்களின் உடலையும் உண்ணும். அவசர அவசரமாய்ச் சாப்பிடுகிற உணவை நன்கு செரிப்பதற்காக இவற்றின் இரைப்பையில் நான்கு அறைகள் இருக்கும்.

பழுப்பு நிறத்தில் இருக்கும் இதன் உடம்பில்   வெள்ளைக் கோடுகள் தென்படும். குளம்புகள் உள்ள இவற்றின் கால்கள்  மெலிதாகவும், குட்டையாகவும் இருக்கும். வாயில் 34 பற்கள் உண்டு. நன்கு வளர்ச்சி பெற்ற எலிமானின் நீளம் 20 அங்குலமும்,  எடை 0.7லிருந்து அதிகப்படி 8 கிலோகிராம் வரையும்தான் இருக்கும். உயரம் 45லிருந்து 55 சென்டிமீட்டர். மான்கள் என்று பெயர் இருந்தாலும் இவற்றுக்குக் கொம்புகள் கிடையாது. கோரைப் பற்கள் உண்டு! இவை 2 வருடம் முதல் அதிகப்படியாக 12 வருடம் வரை உயிர் வாழும். ரொம்பவே பயந்த சுபாவம் உடைய பிராணி இது. இரவில் மட்டும்தான் வெளியே நடமாடும். பகலில் வெளியே இவை தென்படாத தாலும், அடர்ந்த புதர்களுக்குள் மறைந்திருப்பதாலும் காட்டுக்குள் இவற்றை நேரடியாப் பார்ப்பது அபூர்வம். இவற்றின் காலடித் தடங்களையும், கழிவுகளையும் பார்த்துத்தான் ஓர் இடத்தில எலிமான்கள் இருப்பதை உறுதி செய்ய முடியும்.

எலிமான்...
எலிமான்...

பகலில் மரங்களிலோ, வளைகளிலோ ஓய்வெடுக்கும். ஏதாவது ஆபத்து வந்ததென்று கருதினால், தங்களுடைய பின்னங்கால்களைத் தரையில் படார் படாரென்று அடித்துக்கொள்ளும். சில வகை எலி மான்களுக்குத் தண்ணீர் என்றால் மிகவும் விருப்பம். அடிக்கடி நீந்திக்கொண்டே இருக்கும். இதன் மாமிசத்துக்காக மக்கள் வேட்டையாடுவதும் உண்டு. எலிமான் வகையிலிருந்து திமிங்க லங்கள் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்க லாம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

மலேசிய இன எலிமான்களை வீட்டில் செல்லப் பிராணியாகவும் வளர்க்கிறார்கள். வரலாற்றிலும் எலிமானுக்கு இடம் உண்டு.

சிங்கப்பூர்மீது வேற்று நாட்டவர் படையெடுத்து வந்தபோது, அங்கிருந்து பரமேஸ்வரர் என்னும் சிற்றசர் தப்பிவந்து ஒரு மரத்தடியில ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தாராம். அந்த மரத்துக்கு ‘மலாக்கா’ என்று பெயர். அப்போது எலிமான் ஒன்று, தன்னை விடப் பலசாலியான ஒரு நாயை எட்டி உதைத்து ஆற்றுக்குள் தள்ளியதாம். அதைப் பார்த்த பரமேஸ்வரர், நல்ல சகுனம் என்று நினைத்துக்  கடுமையாகப் போராடி வென்று, அதே இடத்தில் மலாக்கா அரசை நிறுவி னாராம். அதுதான் இப்போதைய மலேசியாவில் உள்ள மலாக்கா மாநிலம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com