மாங்காய் சீசனில் இந்த அற்புதமான 4 மாங்காய் ரெசிபிஸ் ட்ரை பண்ணுங்க!

4 Amazing mango recipes.
4 Amazing mango recipes.

"மாதா ஊட்டாத சோறை மாங்காய் ஊட்டும்" என்பார்கள். இது முற்றிலும் உண்மை. ஏப்ரல், மே மாதங்கள் மாங்காய் சீசன். இந்த சமயத்தில் மாங்காயை வாங்கி விதவிதமாக சமைத்து உண்ணலாம். "பொங்கினால் புளி, மங்கினால் மாங்காய்" என்று கூறுவது வழக்கம். மழை அதிகமாக பெய்தால் புளி காய்த்து தொங்கும். வெயில் அதிகம் இருந்தால் மாங்காய் அதிக விளைச்சல் இருக்கும். விதவிதமான மாங்காய்கள் விதவிதமான ருசியை கொடுக்கும். ருமானி அதிகம் புளிக்கும். கிளி மூக்கு மாங்காய் இனிப்புடன் சேர்ந்த புளிப்பு இருக்கும்.

1) மாங்காய் சாம்பார்

தேவையான பொருட்கள்:

  • மாங்காய் ஒன்று 

  • முருங்கைக்காய் 2 

  • உப்பு சிறிது

  • மஞ்சள் பொடி 1 ஸ்பூன்

  • பச்சை மிளகாய் 4  

  • வெந்த துவரம் பருப்பு 1/2 கப்

  • தனியா பொடி 1 ஸ்பூன்

  • வெல்லம் சிறு துண்டு

  • தாளிக்க: கடுகு, கறிவேப்பிலை

செய்முறை:

 இந்த சாம்பார் பண்ணுவதற்கு புளி தேவையில்லை. புளிப்பான மாங்காயாக எடுத்து கொட்டை நீக்கி துண்டுகளாக்கவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய மாங்காய் துண்டுகள், முருங்கைக்காய் துண்டுகள் சேர்த்து தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள்,4 பச்சை மிளகாயை கீறி போட்டு வேக விடவும். நன்கு வெந்ததும் குழைவாக வெந்த துவரம் பருப்பை சேர்த்து, வெல்லம் சிறு துண்டு, தனியா தூளையும் போட்டு நன்கு கொதித்ததும் இறக்கி விடவும். வாணலியில் கடுகு, கருவேப்பிலையை தேங்காய் எண்ணெயில் தாளித்துக் கொட்ட மிகவும் ருசியான மாங்காய் சாம்பார் தயார்.

2) மாங்காய் சாதம்

தேவையான பொருட்கள்:

  • மாங்காய் ஒன்று

  • உப்பு தேவையானது

  • மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்

  • பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்

  • பச்சை மிளகாய் 4

  • வடித்த சாதம் இரண்டு கப்

  • தேங்காய் எண்ணெய் 4 ஸ்பூன்

  • தாளிக்க: கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை     

செய்முறை:        

அதிகம் புளிப்பில்லாத மாங்காயாக எடுத்து தோல் சீவி துருவிக் கொள்ளவும். வாணலியில் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு பொரிந்ததும் கருவேப்பிலை சேர்த்து துருவி வைத்துள்ள மாங்காயை போடவும். தேவையான அளவு பொடித்த உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் கலந்து அடுப்பை நிதானமான தீயில் வைத்து இரண்டு நிமிடம் வதக்கவும். நன்கு வதங்கியதும் வடித்த சாதம் இரண்டு கப் கலந்து கிளற மிகவும் ருசியான மாங்காய் சாதம் தயார். 

3) மாங்காய் பச்சடி

தேவையான பொருட்கள்:

  • மாங்காய் ஒன்று

  • உப்பு சிறிது

  • மஞ்சள் தூள் 1 ஸ்பூன்

  • பச்சை மிளகாய் 2 

  • பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்

  • வெல்லம் 1/2 கப்

தாளிக்க:

  • கடுகு 1 ஸ்பூன்

  • காய்ந்த மிளகாய் 2

  • வேப்பம்பூ 1 ஸ்பூன்

செய்முறை:

மாங்காயை தோல் சீவி துண்டங்களாக நறுக்கி உப்பு, மஞ்சள் தூள், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு வேக விடவும். மாங்காய் வெந்ததும் பொடித்த வெல்லம், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கொதித்து கெட்டியானதும் இறக்கவும். வாணலியில் கடுகு, காய்ந்த மிளகாய் கிள்ளியது சேர்த்து கடுகு பொரிந்ததும் சுத்தம் செய்த வேப்பம்பூவை சேர்த்து வறுத்து மாங்காய் பச்சடியில் கொட்டவும்.இனிப்பு, புளிப்பு, காரம் ,துவர்ப்பு ,உப்பு,சிறிதளவு கசப்பு(வேப்பம்பூ) சேர்ந்த அறுசுவை பச்சடி தயார்.

4) மாங்காய் சட்னி

தேவையான பொருட்கள்:

  • மாங்காய் 1

  • தேங்காய் துருவல் 4 ஸ்பூன்

  • உப்பு சிறிது

  • பச்சை மிளகாய் 2

  • கருவேப்பிலை சிறிது

  • பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்

  • உளுத்தம் பருப்பு 2 ஸ்பூன்

  • காய்ந்த மிளகாய் 2

இதையும் படியுங்கள்:
Ather Halo Helmet: இது சாதா ஹெல்மெட் இல்ல, ஸ்மார்ட் ஹெல்மெட்! 
4 Amazing mango recipes.

புளிப்பான மாங்காயாக எடுத்து தோல் சீவி துண்டுகளாக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் இரண்டையும் சிவக்க வறுத்து எடுக்கவும். முதலில் வறுத்த உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் இரண்டையும் உப்பு சேர்த்து பொடித்துக் கொண்டு அத்துடன் மாங்காய், தேங்காய் , துருவல், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து அரைக்கவும். வாணலியில் கடுகு தாளித்துக் கொட்டி பெருங்காயத்தூள் கலந்து விட மிகவும் ருசியான மாங்காய் சட்னி தயார். இதனை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். டிபன் அயிட்டங்களுக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com