கலர்ஃபுல் பீட்ரூட் கோளா இப்படி செய்து பாருங்கள்!

பீட்ரூட் கோளா ...
பீட்ரூட் கோளா ...
Published on

ங்கிலக்காய் வகைகளில் கேரட், பீட்ரூட் அதிகம் உணவுகளில் சேர்க்கப்படுகிறது. இரண்டிலுமே உடலுக்குத் தேவையான அதிக நன்மைகள் இருப்பது அறிவோம். இதில் பீட்ரூட் பற்றிப் பார்ப்போம்.

பீட்ரூட் மற்றும் கேரட் சாறு இரண்டிலும் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.    பீட்ரூட்டில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதில் மிகக் குறைந்த அளவிலான கலோரிகளே உள்ளது.  மேலும் இதில் நார்ச்சத்து, புரதச்சத்து, கால்சியம், சோடியம், மெக்னீசியம், இரும்பு, கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், பொட்டாசியம், ஃபோலேட், மாவுச்சத்து, ஜிங்க் உள்ளிட்ட அநேக சத்துக்கள் உள்ளது.

இதிலுள்ள அதிக அளவிலான நீரில் கரையும் நார்ச்சத்துக்கள்  உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, பெருங்குடலைச் சுத்தமாக வைத்திருக்க உதவுவதால் செரிமானத்திற்கு சிறந்த தீர்வாக அமைகிறது.

பீட்ரூட்டில் பீட்டாலைன் என்ற அழற்சி எதிர்ப்புப் பண்புகள் அதிக அளவில் நிறைந்திருப்பதால் நாள்பட்ட அழற்சி தொடர்பான பிரச்னைகளைக் குறைக்க உதவுகிறது. குறிப்பாக, இது சிறுநீரகத்தில் ஏற்படும் அழற்சியைப் போக்க உதவுகிறது. இதன் மூலம் சிறுநீரகப் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கலாம்.

இத்தனை சத்துக்கள் இருக்கும் பீட்ரூட்டைப் பொரியலாகத் தந்தால் பிள்ளைகள் சாப்பிட மறுப்பார்கள். ஆனால் கொஞ்சம் கமகமன்னு காரசாரமான முறுமுறுப்பான கோளா உருண்டையாக செய்து தந்தால் நிச்சயம் கேட்டு சாப்பிடுவார்கள். வாங்க பீட்ரூட் கோளா எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

தேவை;
பீட்ரூட் கால் -1/4கிலோ
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு விழுது -ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு - ஒரு டம்ளர்
பட்டை - 2 துண்டு
லவங்கம் -5
சோம்பு - சிறிது
மிளகாய்த்தூள் -ஒரு ஸ்பூன்
உப்பு -தேவைக்கு
எண்ணெய் -சுடுவதற்கு
கருவேப்பிலை கொத்தமல்லி- சிறிது

இதையும் படியுங்கள்:
பிரபலங்கள் குடிக்கும் ‘பிளாக் வாட்டர்’ பற்றித் தெரியுமா?
பீட்ரூட் கோளா ...

செய்முறை;

கடலைப்பருப்பை நன்கு சுத்தம் செய்து நீரில் மூன்று மணி நேரம் ஊறவைத்து வடிகட்டியில் போடவும். பீட்ரூட் நல்ல சிவப்பாக தரமான காயாக வாங்கி தோல் சீவி துருவியில் நன்கு துருவிக் கொள்ளவும். அடுப்பில் கனமான வாணலி வைத்து ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து இஞ்சி பூண்டு விழுது போட்டு வாசம் வர வதங்கியதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பிலை மல்லி இலை  பீட்ரூட் துருவல், சிறிது உப்பு எல்லாம் சேர்த்து நீர் தெளித்து வேகவைத்து கூடவே மிளகாய்த்தூள் சேர்த்து ஆறவைக்கவும்.

தண்ணீரை நன்றாக வடித்த பருப்பை மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் இட்டு ஆட்டி சற்று மசிந்ததும் பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து தண்ணீர் இல்லாமல் உப்பு போட்டு கரகரவென்று ஆட்டி வதக்கி வைத்திருக்கும் பீட்ரூட் கலவையும் சேர்த்து சிறு சிறு உருண்டையாக உருட்டி எண்ணெயில் போட்டு சிவக்க எடுத்தால் பீட்ரூட் கோளா ரெடி.

காரம் அவரவர் தேவைக்கு சேர்க்கலாம். அதேபோல் மசாலாவும் வேண்டாமெனிலும் ருசியாகவே இருக்கும். கடலைப்பருப்பு பாதி தூளாக்கிய பொட்டுக்கடலை பாதியும் சேர்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com